ரேஸ்கோர்ஸ் ரோடு வீவக வீட்டில் தீ: ஐவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

ரேஸ்கோர்ஸ் ரோடு வீவக வீட்டில் தீ: ஐவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

2 mins read
1933c13e-3059-49ca-91c1-fd7837dd3378
காயமுற்ற ஐவரில் மூவர் சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
திங்கட்கிழமை (ஆகஸ்:ட 3) இரவு மணி 7.10க்குத் தீ விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்ததாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.
திங்கட்கிழமை (ஆகஸ்:ட 3) இரவு மணி 7.10க்குத் தீ விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்ததாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது. - படம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, ஃபேஸ்புக்

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடொன்றில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) இரவு தீ விபத்து ஏற்பட்டது.

ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள புளோக் 684ன் ஐந்தாம் தளத்தில் மூண்ட தீ குறித்து அன்றைய தினம் இரவு மணி 7.10க்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.

தீயணைப்புப் படையினர் அங்குச் சென்றுசேர்ந்தபோது, வீட்டில் ஐவர் சிக்கியிருந்தனர். அவர்களில் ஒருவரைக் காவல்துறையினர் மீட்டனர். எஞ்சிய நால்வரைத் தீயணைப்புப் படையினர் காப்பாற்றினர்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐவரில் மூவர் சுயநினைவின்றி இருந்தனர். கறும்புகையை அதிகம் சுவாசித்த காரணத்தால் அவர்கள் மூர்ச்சையானதாக நம்பப்பட்டது.

அவர்களில் ஒருவருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் எனவும் எஞ்சிய நால்வர் 70 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அறியப்படுகிறது.

அவர்களில் இருவர் டான் டொக் செங் மருத்துவமனைக்கும் மூவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த விவரங்களை எஸ்சிடிஎஃப் அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

தீயணைப்புப் படையினர் வீட்டில் நுழைந்தபோது படுக்கையறையில் தீ எரிந்துகொண்டிருந்தது. அதனைக் குழாயைக் கொண்டு தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்கள் அணைத்தனர் என்று எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.

ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திருவாட்டி டெனிஸ் புவா அங்கு இரவு 8மணியளவில் சம்பவத்தை நேரில் பார்வையிடச் சென்றார்.

அப்போது நகரமன்ற ஊழியர்கள் இடத்தைத் துப்புரவு செய்துகொண்டிருந்ததாக அவர் கூறினார்.

நிலைமை சற்றுத் தணிந்து இல்லம் திரும்பிய பாதிக்கப்பட்டோருக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் பலர் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றும் திருவாட்டி புவா கூறினார்.

தீ விபத்தில் உதவிய அமைப்புகளுக்கும் மீட்புப் பணிகளை மேற்கொண்டோருக்கும் ஊழியர்களுக்கும் அவசர உதவி வழங்கிய தொண்டூழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்