சிங்கப்பூரில் ஜனவரி 10, 11 ஆகிய இரண்டு நாள்களில் பெய்த மழை மாத சராசரியையும் மிஞ்சிவிட்டது.
இந்த இரண்டு நாள்களில் சிங்கப்பூரின் மாத சராசரி மழையான 222.44 மில்லி மீட்டரை விட சாங்கியில் அதிகமாக 255.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது என்று தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தற்போதைய பருவநிலை காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 13) வரை விடாமல் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அது கூறியது.
ஜனவரி 10, 11 தேதிகளில் தஞ்சோங் காத்தோங் அருகில் உள்ள ஜாலான் சீவியூ, மவுண்ட்பேட்டன் ரோடு, தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சந்திப்பு, ஜாலான் போகோக் செருனாய் உள்ளிட்ட இடங்களில் பல வெப்ப அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டன.
இந்தப் பகுதிகளில் பெய்த கனமழையால் வடிகால் மற்றும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஜனவரி 10ஆம் தேதி மாலை ஜாலான் சீவியூ நெடுகிலும் வெள்ளம் ஏற்பட்டது. அப்பகுதியில் விடாமல் பெய்த மழையால் அருகிலுள்ள கால்வாய், சுற்றியுள்ள சாலையோர வடிகால்கள் வெள்ளத்தில் மூழ்கின.
“பொதுப் பயனீட்டுக் கழகத்தின் அவசரநிலைக் குழுக்கள் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக ஜாலான் சீவியூ உள்ளிட்ட வெள்ள அபாய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அக்குழுக்கள் இயந்திரங்களைக் கொண்டு சாலைகளிலிருந்து வெள்ள நீரை வெளியேற்றியது. குடியிருப்பாளர் களுக்கு வெள்ள பாதுகாப்பு சாதனங்கள் விநியோகிக்கப்பட்டன,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் காட்டும் பல காணொளிகள் இணையத்தில் பரவுவதை அறிந்திருப்பதாக நீர் முகவை மேலும் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“இந்தக் காணொளிகளை பகிரவோ, சமூக ஊடகங்களில் வெளியிடவோ வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். பழைய காணொளிகள் தற்போது தேவையில்லாத குழப்பதையும் தேவையற்ற வகையில் மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தும்,” என்று அது எச்சரித்தது.
பொதுமக்கள் வானிலை, வெள்ளம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை myENV கைப்பேசி செயலி, மற்றும் பியுபியின் டெலிகிராம் வழியாகத் தெரிந்துகொள்ளலாம்.
உணவுப் பாதுகாப்பு குறிப்புகளும் பியுபி இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.