லோவர் பியர்ஸ் நீர்த்தேக்கத்தில் அரியவகை வெளவால்

1 mins read
6ec755ca-2ea5-4de3-b8a9-76989b359604
ட்ரெஃபாய்ல் ஹர்ஸ்‌ஷூ வெளவால். - படம்: ஜோவேன் டோ

சிங்கப்பூருக்குச் சொந்தமான அரியவகை வெளவால், லோவர் பியர்ஸ் நீர்த்தேக்கத்தில் காணப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, விலங்கு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழத்தியுள்ளது.

இம்மாதம் 23ஆம் தேதியன்று திருவாட்டி ரொவெனா சோவ், அந்த ட்ரெஃபாய்ல் ஹர்ஸ்‌ஷூ (Trefoil Horseshoe) வகை வெளவாலைக் கண்டார். இரு நாள்களுக்கு முன்பு ஜோவேன் டோ என்ற தனது தோழி வெளவாலைப் பற்றித் தெரிவித்ததும் அவர் அதைப் பார்த்துவிடவேண்டும் என முடிவெடுத்தார்.

தனது குடும்பத்தில் அவசரச் சூழல் நிலவிய வேளையிலும் 52 வயது திருவாட்டி சோவ் வெளவாலைப் பார்க்கும் முயற்சியில் இறங்கினார். லோவர் பியர்ஸ் நீர்த்தேக்கத்தின் நுழைவாயிலில் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு அந்த வெளவாலைப் பார்த்ததாக அவர் தெரிவித்தார். பிறகு அது அங்கிருந்து பறந்து சென்றது.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அதைக் காணொளியாகப் பதிவுசெய்தேன். இந்த வகை வெளவாலை அதிகம் பார்க்க முடியாதது அதற்குக் காரணம். நிஜ வாழ்க்கையில் அதைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சியடைந்தேன்,” என்றார் சொத்துச் சந்தை முகவரான திருவாட்டி சோவ். ட்ரெஃபாய்ல் ஹர்ஸ்‌ஷூ வகை வெளவாலைப் பற்றி அவர் ஈராண்டுகளுக்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறார்.

தான் எடுத்த காணொளியை திருவாட்டி சோவ், ‘நேச்சர் சொசைட்டி சிங்கப்பூர்’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

ட்ரெஃபாய்ல் ஹர்ஸ்‌ஷூ வெளவால், உலகில் முழுமையாக அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கும் விலங்கு என்றும் அதை தெக்கோங் தீவு, மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதி ஆகிய பகுதிகளில் காணலாம் என்றும் தேசிய பூங்காக் கழகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்