மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதியில் (Central Catchment Nature Reserve) கடந்த ஜூலை மாதம் இரு சுண்டா வகை பெங்கொலின் எறும்புதின்னிகள் (Sunda pangolins) சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
பிற்பகலில் நடந்த அந்தச் சண்டையில் சிறிதாக இருக்கும் எறும்புதின்னி மோசமான காயங்களுக்கு உள்ளானது. அதன் காரணமாக அந்த எறும்புதின்னியைக் கருணைக் கொலை செய்ய நேரிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எறும்புதின்னிகள் சண்டையிட்ட அந்தக் காட்சி அரிதானது. எறும்புதின்னிகள் பொதுவாக இரவில் நடமாடும் விலங்குகளாகும். மேலும், அவை தனியாக இருப்பதுதான் வழக்கம்.
இனப்பெருக்கத்தின்போது மட்டும்தான் அவை பொதுவாக ஜோடியாக இருக்கும். அதோடு, சிங்கப்பூரில் முற்றிலும் அழிந்துபோகக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கும் விலங்கு இது.
இதற்கு முன்பு கடைசியாக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புதான் சுண்டா எறும்புதின்னிகள் சண்டைபோடும் சம்பவம் நிகழ்ந்தது. அச்சம்பவம் 2005ஆம் ஆண்டு நவம்பருக்கும் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தது.
அதற்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி பிற்பகல் ஒரு மணியளவில் மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதியில் உள்ள சாக்கடையில் இந்த எறும்புதின்னிகள் சண்டையிட்டது காணப்பட்டது. நேச்சர் (Nature) இணைய சஞ்சிகையில் ஆய்வாளர்கள் இத்தகவலை வெளியிட்டனர்.