அபராதத் தொகை தள்ளுபடி: வாசகர்களுக்கான சிறப்புப் பரிசை அறிவித்தார் அமைச்சர் ஜோசஃபின் டியோ

தேசிய நூலக வாரியத்தின் 30வது ஆண்டுவிழா கொண்டாட்டம் 

அபராதத் தொகை தள்ளுபடி: வாசகர்களுக்கான சிறப்புப் பரிசை அறிவித்தார் அமைச்சர் ஜோசஃபின் டியோ

2 mins read
22f58def-7523-4993-94f4-2fba7e30f8b8
தேசிய நூலக வாரியத்தின் 30வது ஆண்டுவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அங்கு அமைக்கப்பட்டிருந்த காண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய நூலக வாரியத்தின் 30வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வாசகர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நிலுவையில் உள்ள வாசகர்களின் அபராதத் தொகைகள் தள்ளுபடி செய்யப்படும். தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ சனிக்கிழமை (செப்டம்பர் 6) இதனை அறிவித்தார்.

நூலக அபராதங்களுக்கு ஒருமுறை விலக்கு அளிக்கும் இந்தத் திட்டம் நூலகச் சேவைகளை மேலும் அதிகமானோர் பயன்படுத்த ஊக்கம் அளிக்கும் வகையில் முதன்முறையாகச் செயலாக்கம் காண்கிறது என்றார் அவர்.

வாரியத்தின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் டியோ, வாசகர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இலவச நூல் விநியோகச் சேவை நடப்புக்கு வருவதாகத் தெரிவித்தார். 

சனிக்கிழமை (செப்டம்பர் 6) அன்று நடைபெற்ற தேசிய நூலக வாரியத்தின் 30வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ.
சனிக்கிழமை (செப்டம்பர் 6) அன்று நடைபெற்ற தேசிய நூலக வாரியத்தின் 30வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: தேசிய நூலக வாரியம்

வாசகர்களுக்குப் பரிசாக வந்து சேர்ந்துள்ள இவ்விரு திட்டங்களும் இந்த ஆண்டின் (2025) இறுதியில் நிறைவுறும். ஏறத்தாழ $8.72 மதிப்புள்ள இந்த விநியோகச் சேவைக்கான கட்டணம், ஆண்டிறுதி வரை ஒவ்வொரு வாரமும் 300 வாசகர்களுக்கு இலவசமாகக் கிடைக்கவுள்ளது.

செப்டம்பர் 6ஆம் தேதிக்குமுன் அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தும்.

தற்போது அபராதத் தொகை நிலுவையில் உள்ளவர்களால் நூல்களை இரவல் பெற இயலாது. ஆனால் இந்தத் தள்ளுபடி மூலம் டிசம்பர் 31ஆம் தேதி வரை அவர்கள் மீண்டும் நூலக வளங்களை இரவலாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

“அறிவு, பண்பாடு, முன்னேற்றம் ஆகியவற்றின் நிலையான அடையாளம் நூலகங்கள்,” என்று குறிப்பிட்ட அமைச்சர், மேற்கூறிய அறிவிப்புகள் வாசித்தல், கற்றல், கண்டறிதல் ஆகிவற்றிற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உறுதியான கடப்பாட்டிற்கு ஏற்ப அமைந்துள்ளன,’’ என்று சொன்னார். 

மின்னிலக்கமயமாதல், வாசித்தல் சார்ந்த கட்டமைப்பை உலகளாவிய வகையில் மறுவடிவமைப்பு செய்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், “மின்னிலக்கச் செய்திகளை நுகர்வோர், குறிப்பாக இளையர் பரவலாக நாடும் அந்த மாற்றத்தைச் சிங்கப்பூரிலும் காண முடிகிறது. 2024ஆம் ஆண்டில் அமைச்சு நடத்திய மதிப்பீட்டு ஆய்வில், 15 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் பாதிப் பேர் இணையச்செய்திப் பயனீட்டாளர்களாக இருந்தனர்,” என்றார்.

மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாட்டின் வாசிப்புக் களம் இருப்பதாகச் சொன்ன அமைச்சர், காப்பகம், தகவல்தளம் என்பதற்கும் அப்பால் சிங்கப்பூரர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நூலகங்கள் திகழவேண்டும். அதன்வழி கற்றலும் கண்டறிதலும் முற்றுப்பெறாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும்,’’ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்தக் கொண்டாட்டங்கள் குறித்துத் தமிழ் முரசிடம் பேசிய வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைப் பிரிவு நூலகர் ஜமுனா, “வாரியத்தின் அடுத்த அத்தியாயம் என்பது நூலகத்துடனான வாசகர்களின் கற்றல் பயணத்தை இன்னும் வேறுபட்ட விதத்தில் செழிப்புறச் செய்யும் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது.” என்றார்.

வாரியத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வாசகர்கள் தங்கள் கனவு நூலகத்தை அமைத்தல், நூலக ஆவண  விளையாட்டு உள்ளிட்டவை அறிமுகம் கண்டுள்ளதாகவும் விழா தொடர்பிலான நினைவுப் பொருள்கள் விற்பனைக்காக வந்துள்ளதாகவும் அவர் விவரித்தார்.

வாசகர்கள் இதுகுறித்த மேல் விவரங்களுக்கு வாரியத்தின் இணையப்பக்கத்தை நாடலாம்.  

குறிப்புச் சொற்கள்