பள்ளிக்காலத்துக்குப் பிறகும் வாசிப்பு முக்கியம்: கல்வி அமைச்சர் சான்

2 mins read
1cd23779-a367-4619-a718-5b1003b9172d
கோப்புப் படம்: - சாவ்பாவ்

மக்களின் வேலை சார்ந்த திறன்களை மேம்படுத்தும் முயற்சிகளை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

அதோடு, எழுத்தறிவுத்திறன் குன்றாமல் பார்த்துக்கொள்ள அவரவரிடையே வாசிப்புப் பழக்கத்தைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படவேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் புதன்கிழமையன்று (ஜனவரி 8) வலியுறுத்தினார்.

“தகவல்களை உள்வாங்கி அவற்றை உபயோகிக்க வகைசெய்யும் நோக்கில் எழுத்துத்திறன் ஆற்றலை சீராக வைத்திருக்கத் தொடர்ந்து வாசிப்புப் பழக்கத்தைப் பின்பற்றுமாறு நமது மக்களை ஊக்குவிக்கவேண்டும்.

“இவ்வுலகில் போதுமான தகவல் இல்லாதது பிரச்சினை அல்ல, அதிகத் தகவல்கள் இருப்பதே சவாலாக இருக்கிறது; குறிப்பாக அப்படிப்பட்ட சூழலுக்கு இது மிகவும் பொருந்தும்,” என்று திரு சான் விவரித்தார்.

எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு திரு சான் பதிலளித்தார். வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ மீ ஹார், பைனியர் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே, ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ‌ஷெரில் சான் உள்ளிட்டோர் பெரியவர்களின் ஆக்கபூர்வ ஆற்றலைக் கணிக்கும் அனைத்துலகச் சோதனைத் திட்டத்தின் (பிஐஏஏசி) முடிவுகளைக் குறித்து கேள்வி எழுப்பினர்.

அத்திட்டத்தைப் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு (OECD) நடத்துகிறது. பிஐஏஏசி, எழுத்துத்திறன், ஆற்றல், எண்களைக் கொண்டு பணியில் ஈடுபடுவது போன்ற அம்சங்களில் பெரியவர்களின் ஆற்றலைக் கணிக்கிறது.

அதற்கான பட்டியலில் எண்களைக் கொண்டு பணியில் ஈடுபடும் ஆற்றலைப் பொறுத்தவரை சிங்கப்பூர் ஆக அதிக மேம்பாடு கண்ட நாடாக விளங்குகிறது; 39 நாடுகளில் சிங்கப்பூர், 25வது இடத்திலிருந்து 31 நாடுகளில் 10வது இடத்துக்கு முன்னேறியது.

எழுத்துத்திறன் ஆற்றலிலும் சிங்கப்பூர் 28வது இடத்திலிருந்து 18வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளை, 35 வயதைத் தாண்டியோருக்கிடையிலான எழுத்துத்திறன் ஆற்றலில் சிங்கப்பூர் குறிப்பிடத்தக்க வகையில் சரிந்தது.

தங்களின் கற்றல் பயணத்துக்கு அவரவர் பொறுப்பேற்று தொடர்ந்து திறன்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டும், வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார். அதேபோல், நிறுவனங்களும் நீக்குப்போக்கைக் கடைப்பிடித்து உருமாற்றிக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்