சிங்கப்பூர் அறநிறுவனம் நடத்திய காஸா $8.1 மி. நிதித்திரட்டு

1 mins read
5b9130f3-3ccf-49c7-822d-849bc9e8f6fd
காஸாவுக்கு ‘ரஹ்மத்தன் லில் ஆலமீன்’ அறநிறுவனத்தின் நிதித்திரட்டு முயற்சி ரமலான் மாதத்தின்போது மேலும் ஒரு முறை மேற்கொள்ளப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காஸா சமூகங்களுக்கு உதவி வழங்குவதற்கான நிதித்திரட்டு முயற்சி ஒன்றில் $8.1 மில்லியனுக்கும் மேல் திரட்டப்பட்டது.

அந்த நிதித்திரட்டு 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் அந்தத் தொகை திரட்டப்பட்டது.

அக்டோபர் 19 முதல் நவம்பர் 17 வரை திரட்டப்பட்ட $8,114,422, ‘ரஹ்மத்தன் லில் ஆலமீன்’ அறநிறுவனம் திரட்டிய ஆக அதிகமான தொகையாகும்.

அஷ்ஷஃபா பள்ளிவாசலில் மார்ச் 9ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு இடையே, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி பேசினார்.

திரட்டப்பட்ட தொகை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிவாரண, பணிகள் அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே நாளன்று ‘ரஹ்மத்தன் லில் ஆலமீன்’ அறநிறுவனம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், “காஸாவில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் சுகாதாரம், நிவாரணம், அடைக்கலம் ஆகியவற்றுக்காக உதவி வழங்க தாராளமாகப் பங்களித்த அனைத்துக் குழுக்களுக்கும் தனிநபர்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,” என்று குறிப்பிட்டது.

காஸா மக்களுக்கு உதவி சென்றுசேர்வது தொடர்பான தகவல்கள் பற்றி தனது பங்காளிகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டு, கண்காணித்து வந்ததாக அறநிறுவனம் கூறியது.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு மசகோஸ், எதிர்வரும் ரமலான் மாதத்தின்போது காஸாவுக்காக அறநிறுவனம் மேலும் ஒரு முறை நிதித்திரட்டு முயற்சியை மேற்கொள்ளும் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்