ரெட்ஹில் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று (ஆகஸ்ட் 28) விடியலுக்கு முன்னர் நிகழ்ந்த தீச்சம்பவம் காரணமாக நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ரெட்ஹில் குளோஸ், புளோக் 68ன் நான்காவது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பிடித்து எரிவதாக அதிகாலை 1.15 மணியளவில் தனக்குக் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியது.
தீயணைப்புப் படையினர் விரைந்து சென்றபோது வீட்டின் வரவேற்பறையில் தீ எரிந்துகொண்டு இருந்தது. அதனை அந்தப் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீட்டின் படுக்கையறையில் இருந்த மூவர் மீட்கப்பட்டனர். அப்போது அவர்கள் சுயநினைவுடன் இருந்தனர்.
தீப்புகையைச் சுவாசித்ததாலும் லேசான தீக்காயங்களாலும் பாதிக்கப்பட்ட அம்மூவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
புளோக்கின் மற்றொரு தளத்தில் இருந்த ஒருவரும் தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட காரணத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட புளோக்கில் இருந்து ஏறத்தாழ 50 குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
வரவேற்பறையில் இருந்த மின்சார சாதனம் ஒன்றில் இருந்து தீப்பிடித்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
மின்சாரம் பொருத்தும் கருவிகளில் அதிக பளு ஏற்ற வேண்டாம் என்று பொதுமக்களை அந்தப் படை கேட்டுக்கொண்டது.
மேலும், பயன்பாட்டில் இல்லாத மின்சார சாதனங்களை அணைத்து வைக்குமாறும் மின்கம்பிகளை அவ்வப்போது சோதித்துக்கொள்ளுமாறும் அது பொதுமக்களுக்கு யோசனை தெரிவித்துள்ளது.