பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதிக்கு வெளியே, விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள வணிகக் கப்பலின் உருவடிவம், பொறியியல் ஆலோசகர் சராஃபியன் சாலேக்கு அவரது பூர்வீகத்தை நினைவூட்டும்.
பினிசி என்றழைக்கப்படும் அக்கப்பல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்துவந்த பூகிஸ் மக்களின் அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது.
சிங்கப்பூரில் பூகிஸ் எனப் பெயரிடப்பட்ட பல்வேறு இடங்கள் இருந்தாலும், பூகிஸ் மக்களின் பங்களிப்பை நினைவுபடுத்தும் பொருள்களில் அந்தக் கப்பலும் ஒன்று என்கிறார் திரு சராஃபியன்.
“பூகிஸ் மக்களை, அவர்களின் அடையாளத்தை, கலாசாரத்தை அறிந்த சிங்கப்பூரர்கள் மிகச்சிலரே. அவர்கள் சுலவேசியிலிருந்து வந்த கடற்பயண வல்லவர்கள் என்பதும் பலருக்கும் தெரியாது,” என்றார் அவர்.
பூகிஸ் சமூகத்தைப் பற்றி அதிகமானோர் தெரிந்துகொள்ளும் வகையில், ‘துவா பூகிஸ் – சிங்கப்பூர் கடற்பயண மக்களின் வரலாறு (Tuah Bugis – Chronicles of the Seafaring People of Singapore)‘ என்ற தலைப்பில் ஆங்கில நூலை அவர் எழுதியிருக்கிறார்.
சிங்கப்பூரிலுள்ள பூகிஸ் சமூகம், மலாய் சமூகத்துடன் ஒருங்கிணைந்துள்ள போதிலும், அவர்களின் பாரம்பரிய ஆடையான சாரோங் பூகிஸ், கொட்டோ மகாசார் போன்ற உணவு வகைகள், பூகிஸ் மொழி போன்றவை தனித்துவமானவை.
மரபுடைமை ஆய்வாளரான 53 வயது திரு சராஃபியன், சிங்கப்பூரில் தற்போது சுமார் 4,000 பூகிஸ் மக்கள் இருப்பதாகக் கணிக்கிறார்.
பிரிட்டிஷார் 1819ல் வந்தபின் அவர்கள் சிங்கப்பூருக்கு வரத் தொடங்கினர். நிலத்தில் முதலீடு செய்து, கம்போங் கிளாம் முதல் ரோச்சோர் ஆறு வரை பூகிஸ் நகரை அமைத்தனர். வட்டார வணிகக் கட்டமைப்புகளில் முக்கிய பங்காற்றி, தென்கிழக்காசியாவின் பல்வேறு பகுதிகளுடன் சிங்கப்பூரை இணைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அதிக கடற்பயணங்கள் செய்த பூகிஸ் மக்கள், கப்பல் கட்டுமானத்திலும் பழுதுபார்ப்பிலும் ஈடுபட்டனர்.
திரு சராஃபியன் 15 ஆண்டு முயற்சியெடுத்து, பூகிஸ் சமூகத்தினரின் தனிப்பட்ட கதைகளைச் சேகரித்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
வட்டார நாடுகளிலுள்ள வாசகர்களுக்காக இந்நூலை மலாய் மொழியில் மொழிபெயர்க்கவும் அவர் திட்டமிடுகிறார்.
ஆங்கில நூல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிடப்படும். அதன் விலை $38. வெளியீட்டுக்குமுன் இணையம்வழி வாங்குவோருக்கான விலை $35. சிங்கப்பூர் மரபியல் சங்கத்தின் http://bugistemasek.blogspot.com/ இணையத்தளத்தில் அல்லது mysgheritage@gmail.com மின்னஞ்சல் முகவரியில் நூலை வாங்கலாம்.