கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் கட்டாயமாக ஏழு நாள்கள் மருத்துவமனையில் தங்கவேண்டிய சூழல் இருந்தது.
ஆனால், தற்போது அந்நிலை மாறியிருப்பதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொண்டோர் மருத்துவமனையில் இருக்கும் காலம் மூன்று நாள்களாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஐஎச்எச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரேம் குமார் நாயர் கூறினார்.
அதற்குத் தொழில்நுட்ப வளர்ச்சியும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் முக்கிய காரணம் எனக் குறிப்பிடும் அவர், பராமரிப்பு நிறுவனத்தின் சேவை வழங்கும் முறைகளை அவை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், நோய்களை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிய அவை உதவுகின்றன என்றும் அதனால், நோயாளிகள் சிகிச்சைக்குப்பின் குறுகிய காலம் மருத்துவமனை பராமரிப்பில் இருக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது என்றும் டாக்டர் பிரேம் குமார் தெரிவித்தார்.
65 வயதான அவர், ஐஎச்எச் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரியாக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐஎச்எச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
அதற்கு முன்பு, அவர் ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமத்தில் 27 ஆண்டுகள் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரப் பராமரிப்பை நோயாளிகளின் குடியிருப்புகளுக்கு அருகே கொண்டுசெல்வதன் மூலம் அவர்கள் மருத்துவமனையில் செலவிடும் நேரம் குறையலாம்.
ஐஎச்எச் நோயாளிகள் விரைவில் அச்சேவையை டாக்டர் பிரேம் குமார் தலைமையின்கீழ் எதிர்பார்க்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சுகாதாரக் குழுமத்திற்குச் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, சீனா, துருக்கி உள்ளிட்ட 10 நாடுகளில் 80க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன.
ஹார்பர்ஃபிரண்ட் டவர் ஒன்றில் உள்ள தமது அலுவலகத்திலிருந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அவர், வீட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ மருத்துவப் பராமரிப்பை மாற்றுவது அதிகரித்து வரும் மருத்துவச் செலவினங்களைச் சமாளிக்க உதவும் என்றார்.
மேலும், நோயாளிகள் மருத்துவமனைக்கு நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டிய தேவை இருக்காது என்பதால் அச்சேவை அவர்களுக்கு எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

