கரிம வெளியீட்டைக் குறைப்பது பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்: மூத்த அமைச்சர் டியோ

கரிம வெளியீட்டைக் குறைப்பது பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்: மூத்த அமைச்சர் டியோ

2 mins read
04c66df7-e01e-4fce-9747-04f06809b66a
புதைபடிம எரிபொருள்களைவிட சூரிய ஒளி மூலம் மின்னாற்றலை உற்பத்தி செய்வதற்கான செலவு 50% குறைவு எனச் சொல்லப்படுகிறது. - படம்: எஸ்பிஎச் மீடியா

புதைபடிம எரிபொருளிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது புவியைக் காப்பது மட்டுமின்றி, பொருளியல் வளர்ச்சிக்கும் மக்கள் செழிப்புறவும் தேவையான நடவடிக்கை என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உலகின் மற்ற நாடுகளின் அரசியல் சூழல்கள் சிங்கப்பூரின் பருவநிலை சார்ந்த இலக்குகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீம் வீ கியாக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய தேசியப் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சுநிலைக் குழுவின் தலைவருமான டியோ, பெரிய நாடுகள் பங்களிக்காத பட்சத்தில், தங்களது முயற்சிகள் ஏதேனும் அர்த்தமுள்ள பலன்களை அளிக்குமா என்ற கேள்விகளும் எழலாம் என்றார்.

சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக கரிமத்தை வெளியிடும் அமெரிக்கா, இரண்டாம் முறையாக பாரிஸ் உடன்பாட்டிலிருந்து வெளியேறுகிறது. இது, அர்ஜென்டினா, இந்தோனீசியா போன்ற நாடுகள், தங்களது பருவநிலைக் கடப்பாடுகளைக் கட்டிக்காப்பதன் நோக்கம் குறித்த கேள்வியெழுப்பச் செய்வதாக அமைந்தது.

இந்நிலையில், “பருவநிலை மாற்றம் என்பது இனிமேலும் எதிர்கால அச்சுறுத்தலாக இருக்க முடியாது. இப்போதே அதனை நாம் எதிர்கொண்டு வருகிறோம்,” என்று திரு டியோ குறிப்பிட்டார்.

அதனால், நாடுகளும் நிறுவனங்களும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குக் கட்டாயமாகத் தள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

கடந்த இருபதாண்டுகளில் பசுமைத் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அவற்றால் தூய எரிசக்தியை உற்பத்திசெய்ய முடிவதுடன் செலவு குறைந்ததாகவும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

புதைபடிம எரிபொருள்களைவிட சூரிய ஒளி மூலம் மின்னாற்றலை உற்பத்தி செய்வதற்கான செலவு 50% குறைவு எனச் சொல்லப்படுகிறது.

வரும் 2050ஆம் ஆண்டிற்குள் நிகர அளவில் கரிம வெளியீடற்ற நாடாக உருமாற சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.

கரிம வெளியீடு குறைவாக உள்ள உலகில், பொருளியல் ரீதியிலும் போட்டித்தன்மையுடன் நீடித்திருக்க சிங்கப்பூர் கொண்டுள்ள உறுதியை இந்த இலக்கு வெளிப்படுத்துகிறது என்று மூத்த அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்