குற்றவாளிகளுக்காக ‘சிம்’ பதிவு; 18 பேரிடம் விசாரணை

1 mins read
விசாரிக்கப்படுவோரில் பதின்ம வயதினரும் அடங்குவார்
532fb9e0-da6b-4833-8817-ff223b3f1067
குற்றக் கும்பல்கள் ‘சிம்’ அட்டைகளைப் பயன்படுத்தி ஆள்மாறாட்ட மோசடிகள், உரிமமின்றி கடன் தருதல், சட்டவிரோதப் பாலியல் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. - படங்கள்: சிங்கப்பூர் காவல்துறை

காவல்துறை ஒருவாரம் மேற்கொண்ட நடவடிக்கையில் குற்றவாளிகளுக்கு ‘சிம்’ அட்டைகளை வழங்கிய சந்தேகத்தின்பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஆக இளையவருக்கு வயது 17.

குற்றக் கும்பல்கள் இந்த ‘சிம்’ அட்டைகளைப் பயன்படுத்தி ஆள்மாறாட்ட மோசடிகள், உரிமமின்றி கடன் தருதல், சட்டவிரோதப் பாலியல் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுவதாகக் காவல்துறை பிப்ரவரி 24ஆம் தேதி தெரிவித்தது.

பிப்ரவரி 18ஆம் தேதிக்கும் 24ஆம் தேதிக்கும் இடையே மோசடிச் சம்பவங்களுக்காக ‘சிம்’ அட்டைகளைப் பதிவு செய்தோரைக் குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதில் கைது செய்யப்பட்டோரில் 11 பேர் ஆண்கள். இருவர் பெண்கள். இவர்களில் ஆக முதியவருக்கு வயது 33.

மேலும், ஐவர் விசாரணையில் உதவிவருவதாகக் காவல்துறை கூறியது.

20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அவர்களில் மூவர் பெண்கள் என்று கூறப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், சந்தேகத்துக்குரிய 13 பேரும் ரொக்கம் அல்லது இணையச் சூதாட்டப் புள்ளிகளுக்கு ஈடாக அந்த ‘சிம்’ அட்டைகளைக் குற்றவாளிகளுக்கு வாங்கித் தந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும் தலா 10 முதல் 30 ‘சிம்’ அட்டைகளை அவ்வாறு தந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வந்த புதிய சட்டத்தின்கீழ், அவர்கள் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் S$10,000 வரையிலான அபராதம், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

‘சிம்’ அட்டைகளின் தவறான பயன்பாடு குறித்த மேல்விவரங்களுக்கு www.police.gov.sg/Advisories/Crime/Misuse-of-SIM-Card-Offences என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்