சிங்கப்பூரின் வடக்குப் பகுதிக்குப் புத்துயிரூட்டுவது குறித்து ஆராயப்படுகிறது.
ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை (RTS) இணைப்புக் குறித்த பணிக்குழு மின்னிலக்கத் தொழில்நுட்பத்தின் மூலம் வர்த்தகர்களுக்கு உதவ முற்படுகிறது. ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை (RTS) இணைப்பு, அடுத்த ஆண்டு (2026) இறுதியில் தயாராகிவிடும் என்று நம்பப்படுகிறது. இரு தரப்பையும் சேர்ந்த வர்த்தகர்கள் வாய்ப்புகளைக் கைப்பற்றப் பல்வேறு திட்டங்களைப் பணிக்குழு பரிசீலிக்கிறது.
பணிக்குழு, அதன் ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் அடுத்த ஆண்டின் முற்பாதிக்குள் முடிவுசெய்யத் திட்டமிட்டுள்ளது.
வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான், மார்சிலிங் சமூக மன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 29) இரவு பேசியபோது, அந்த விவரங்களைத் தெரிவித்தார். புதிய நடவடிக்கைகள், அக்கம்பக்கத்தினரிடையே உற்சாகத்தைக் கொண்டுவரும் என்றும் கடைகள் துடிப்புடன் புதுச் சேவைகளை வழங்க முன்வரும் என்றும் அவர் கூறினார்.
திரு டான், பணிக்குழுவின் தலைவராக இருக்கிறார். புதிய ரயில் சேவையால், வர்த்தகர்கள் சிலர் அக்கறை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் ஜோகூர் பாருவுக்குச் செல்வது எளிதாகிவிடும் என்பதால் வருவாய் பாதிக்கப்படும் என்ற அவர்களின் கவலையைப் புரிந்துகொள்ள முடிவதாகத் திரு டான் கூறினார்.
வடக்குப் பகுதிக்குப் புத்துயிரூட்டும் முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அவர் சொன்னார். புதிய ரயில் சேவை தொடங்கிய பிறகு, குடியிருப்பாளர்கள், வர்த்தகர்கள் இரு தரப்பினருக்கும் ஏற்ற தீர்வுகள் எட்டப்படுவதற்குத் தேவையிருப்பதைத் திரு டான் ஒப்புக்கொண்டார்.
புதிய ஆர்டிஎஸ் இணைப்பின் அணுகூலங்களையும் ஆற்றல்களையும் சிங்கப்பூரர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதைப் பணிக்குழு ஆராய்கிறது. பணிக்குழு இதுவரை ஐந்து சந்திப்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. அவற்றில் வடக்குப் பகுதியில் உள்ள 160க்கும் மேற்பட்ட கடைக்காரர்களும் குடியிருப்பாளர்களும் பங்கெடுத்துள்ளனர்.


