சிங்கப்பூரில் உள்ள சிறிய பாலர் பள்ளிகள், குறைந்த கட்டணச் சேவையை வழங்கும் கட்டமைப்பில் இணைவதற்கான மானிய நிபந்தனைகள் தளர்த்தப்படவுள்ளன.
இதன்வழி கூடுதல் சிறிய நிறுவனங்கள் பயன்பெற முடியும் எனச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் கோ பெய் மிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேல்விவரங்கள் 2026 இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கப் பங்காளித்துவப் பாலர் பள்ளித் திட்டத்தில் சேர, நிறுவனங்கள் குறிப்பிட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்திருக்கவும் வேண்டும். தற்போது சிறிய நிறுவனங்களும் இம்மானியத்தைப் பெற ஏதுவாக, அவற்றில் சில தளர்வுகள் கொண்டு வரப்படுகின்றன.
பாலர் பள்ளிக் கட்டமைப்பை விரிவுபடுத்தச் சிங்கப்பூர் தயாராகி வருகிறது. இதனால் 2030ஆம் ஆண்டுக்குள் முழுநேரப் பிள்ளைப் பராமரிப்புக் கட்டணம் மாதம் $150 ஆகவும் குழந்தை பராமரிப்புக் கட்டணம் $300 ஆகவும் குறையும்.
இது குடும்பங்களுக்கு நற்செய்தியாக அமைந்தாலும், தங்களால் போட்டியிட முடியுமா எனத் தனியார்ப் பள்ளிகள் கவலை கொண்டுள்ளன. தேசிய தினப் பேரணி உரைக்குப் பிறகு அவர்களைச் சந்தித்து மூத்த துணை அமைச்சர் கோ கலந்துரையாடினார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி தேசிய தினப் பேரணி உரையில் அறிவிக்கப்பட்ட உருமாற்ற மானியம், புதிய கட்டமைப்பில் நுழையச் சிறிய நிறுவனங்களுக்கு உதவும்.
2026 ஜனவரி 1 முதல் 2030 டிசம்பர் 31 வரை செயல்படும் தற்போதைய கட்டமைப்பில், 33 நிறுவனங்களின் 380 பாலர் பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.
துறையில் போட்டி அதிகரிப்பது புதுமைகளைப் புகுத்த ஊக்குவிப்பதோடு, குழந்தைகளுக்கும் உற்சாகமான, பல வண்ணங்கள் நிறைந்த சூழலை உருவாக்கும் என்றார் மூத்த துணை அமைச்சர் கோ.
கால்டிகாட்டில் உள்ள சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் கட்டடத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவல்களை திரு கோ பகிர்ந்தார்.
குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு அருகிலேயே பாலர் பள்ளிகள் அமைந்திருப்பதையும் அவை கட்டுப்படியாகக்கூடிய விலையில் தரமானதாக இருப்பதையும் உறுதிசெய்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றார் அவர்.
கடந்த செப்டம்பர் மாதம் பாலர்பருவ மேம்பாட்டு ஆணையத்தால் அமைக்கப்பட்ட புதிய அனைத்துலக ஆலோசனைக் குழுவிற்கு திரு கோ தலைமை தாங்குகிறார்.
ஐந்து வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட அந்தக் குழு, உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி ஆரம்பகாலப் பிள்ளைப் பருவக் கல்வி மற்றும் ஆசிரியர் மேம்பாட்டில் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
