200 ஆண்டுகாலச் சேவையில் நாட்டின் ஆகப் பழைமையான மன்றம்

சிங்கப்பூர் கடல்சார் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பழைமையும் சிறப்பும் பெற்ற ஆசியாவின் முதல் சொகுசுப் படகு மன்றம்

200 ஆண்டுகாலச் சேவையில் நாட்டின் ஆகப் பழைமையான மன்றம்

6 mins read
0f6eac04-c1f5-4e4b-b7f1-7d1e87202753
சிங்கப்பூர்க் குடியரசு சொகுசுப் படகு மன்றத்தின் 200வது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டம். - படம்: சிங்கப்பூர்க் குடியரசு சொகுசுப் படகு மன்றம்
multi-img1 of 3

நவீன சிங்கப்பூரின் 200 ஆண்டுகால வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தது சிங்கப்பூர்க் குடியரசு சொகுசுப் படகு மன்றத்தின் (Republic of Singapore Yacht Club) வரலாறு.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் 1826ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த மன்றம் சிங்கப்பூரின் கடல்சார் விளையாட்டு வரலாற்றில் முக்கியத் தூணாக இருந்து வந்துள்ளது. 

சிங்கப்பூரில் நிறுவப்பட்ட ஆகப் பழைமையான மன்றம் என்பதுடன், ஆசியாவின் முதல் சொகுசுப் படகு மன்றம் என்ற பெருமையையும் பெற்றுள்ள இம்மன்றம் தனது 200வது ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது.

அதனைக் குறிக்கும் விதமாக பிப்ரவரி 7ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறப்பணி விருந்து நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம், கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மன்ற உறுப்பினர்கள், பங்குதாரர்கள், சொகுசுப் படகு ஆர்வலர்கள் என ஏறத்தாழ 130 விருந்தினர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி உணவு, இசையுடன் சிறப்பாக நடந்தது.

200வது ஆண்டுநிறைவு, கண்காட்சி

இருநூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் அதிகாரத்துவ தொடக்கமாக நடைபெற்ற அதிபர் சவால் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பல அரிய பொருள்கள் ஏலத்துக்கு விடப்பட்டன.

“இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அதிபர் சவாலுக்கு ஆதரவாக அர்த்தமுள்ள, உன்னதமான முயற்சியுடன் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம். இது சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றத்தின் சமூகத்திற்கான நீண்டகால பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்துகிறது,” என்று 68 வயதான மன்றத்தின் தலைவர் (Commodore) பாலகிருஷ்ணன் பாலராஜூ தெரிவித்தார்.

மன்றத்தின் இருநூறாண்டு நினைவுச் சின்னமாக வெளியிடப்பட்ட தங்க நாணயம் (Bicentennial Commemorative Pure Gold Coin), வரையறுக்கப்பட்ட பதிப்பில் வெளியிடப்பட்ட இருநூற்றாண்டு நினைவு வெள்ளி நாணயங்கள் (limited-edition Bicentennial Pure Silver Coins), உலகில் 12 பாகங்களில் ஒன்றான 60 ஆண்டுகள் பழைமையான மார்டெல் கொன்யாக் (Martell Cognac) அவற்றில் அடங்கும்.

ஏலத்தில் திரட்டப்பட்ட $326,692 தொகை அதிபர் சவால் நிதியில் சேர்க்கப்படவுள்ளது. 

ஏலத்தில் திரட்டப்பட்ட $326,692 தொகை அதிபர் சவால் நிதியில் சேர்க்கப்படவுள்ளது. 
ஏலத்தில் திரட்டப்பட்ட $326,692 தொகை அதிபர் சவால் நிதியில் சேர்க்கப்படவுள்ளது.  - படம்: சிங்கப்பூர்க் குடியரசு சொகுசுப் படகு மன்றம்

நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக மன்றத்தின் 200 ஆண்டு வரலாற்றைக் கண்முன் கொண்டுவரும் வகையில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட அரியவகை வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருள்களும் கோப்புகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. 

மன்றத்தின் 200 ஆண்டு வரலாற்றைக் எடுத்துக்கூறும் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய கலைப்பொருள்களும் கோப்புகளும் அடங்கிய கண்காட்சியை அதிபர் தர்மன் சண்முகரத்னம் பார்வையிட்டார்.
மன்றத்தின் 200 ஆண்டு வரலாற்றைக் எடுத்துக்கூறும் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய கலைப்பொருள்களும் கோப்புகளும் அடங்கிய கண்காட்சியை அதிபர் தர்மன் சண்முகரத்னம் பார்வையிட்டார். - படம்: சிங்கப்பூர்க் குடியரசு சொகுசுப் படகு மன்றம்
மன்றத்தின் 200 ஆண்டு வரலாற்றைக் எடுத்துக்கூறும் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருள்களும் கோப்புகளும் அடங்கிய கண்காட்சி.
மன்றத்தின் 200 ஆண்டு வரலாற்றைக் எடுத்துக்கூறும் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருள்களும் கோப்புகளும் அடங்கிய கண்காட்சி. - படம்: சிங்கப்பூர்க் குடியரசு சொகுசுப் படகு மன்றம்

200ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

200 ஆண்டுகால வரலாறு

சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றத்தின் வரலாறு, சிங்கப்பூரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. 1819ஆம் ஆண்டு ஸ்டாம்ஃப்ர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூருக்கு வந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ‘சிங்கப்பூர் யாட் கிளப்’ (Singapore Yacht Club) என்ற பெயரில் மன்றம் நிறுவப்பட்டது. 

காலனித்துவ வணிகத் தளமாக இருந்த சிங்கப்பூர், சுதந்திரம் பெற்ற உலக மையமாக உயர்ந்திருப்பதை மன்றத்தின் வளர்ச்சி பிரதிபலிக்கிறது.

இங்கிலாந்து அரசர் எட்டாவது எட்வர்டு (Edward VIII), ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் அரசியார் ஆகிய பிரிட்டிஷ் அரச குடும்பத் தலைவர்கள் புரவலர்களாக ஆனதைத் தொடர்ந்து (royal patronage) ‘ராயல் சிங்கப்பூர் யாட் கிளப்’ (Royal Singapore Yacht Club) எனப் பெயர்மாற்றம் பெற்றது. 

இரண்டாம் உலகப்போரின்போது மன்றம் கடும் சோதனைக்கு ஆளானது. அன்றைய மன்ற உறுப்பினர்கள் தொண்டூழியப் படைகளில் சேவையாற்றியதுடன், மன்றத்தின் கட்டடம் சேதமடைந்து, முழுமையாக மறுகட்டுமானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றபின் ‘1967ஆம் ஆண்டு ரிபப்ளிக் ஆஃப் சிங்கப்பூர் யாட் கிளப்’ (Republic of Singapore Yacht Club) என மன்றத்தின் பெயர் மாற்றம் கண்டது. 

அதே ஆண்டில், சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோப் இஷாக் மன்றத்தின் முதல் சிங்கப்பூர் புரவலராக நியமிக்கப்பட்டார்.

சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோப் இஷாக் மன்றத்தின் முதல் சிங்கப்பூர் புரவலர்.
சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோப் இஷாக் மன்றத்தின் முதல் சிங்கப்பூர் புரவலர். - படம்: சிங்கப்பூர்க் குடியரசு சொகுசுப் படகு மன்றம்

அவரைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் முன்னாள் அதிபர்களான அமரர் ஓங் டெங் சியோங், அமரர் எஸ் ஆர் நாதன் போன்றோரும் மன்றத்தின் புரவலர்களாக இருந்துள்ளனர். 

மன்றத்தைச் சேர்ந்தவர்களுடன் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் அமரர் எஸ்.ஆர்.நாதன்.
மன்றத்தைச் சேர்ந்தவர்களுடன் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் அமரர் எஸ்.ஆர்.நாதன். - படம்: சிங்கப்பூர்க் குடியரசு சொகுசுப் படகு மன்றம்

டிராஃபல்கர் ஸ்திரீட்டில் (Trafalgar Street) அமைந்திருந்த முதல் கட்டடம், துறைமுக விரிவாக்கத்திற்காக சுங்கை பாண்டான் (Sungei Pandan) பகுதியில் மீட்கப்பட்ட மாங்குரோவ் நிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 

1920இல் டிராஃபல்கர் வீதியில் (Trafalgar Street) அமைந்திருந்த முதல் கட்டடம்.
1920இல் டிராஃபல்கர் வீதியில் (Trafalgar Street) அமைந்திருந்த முதல் கட்டடம். - படம்: சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகுமன்றம்

இவ்வாறு மூன்று முறை இடமாற்றம் கண்டு இன்று வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் பிரம்மாண்ட நவீன தோற்றத்துடன் காட்சியளிக்கிறது சிங்கப்பூர்க் குடியரசு சொகுசுப் படகு மன்றம். 

இன்று வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் பிரம்மாண்ட நவீன தோற்றத்துடன் காட்சியளிக்கிறது சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றம். 
இன்று வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் பிரம்மாண்ட நவீன தோற்றத்துடன் காட்சியளிக்கிறது சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றம்.  - படம்: சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றம்
இன்று வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் பிரம்மாண்ட நவீன தோற்றத்துடன் காட்சியளிக்கிறது சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றம். 
இன்று வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் பிரம்மாண்ட நவீன தோற்றத்துடன் காட்சியளிக்கிறது சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றம்.  - படம்: சிங்கப்பூர் குடியரசு சொகுசுப் படகு மன்றம்

பொழுதுபோக்காக இருந்த கடல் விளையாட்டுகளைத் தேசிய அளவில் சிறந்து விளங்கும் துறையாக வளர்த்தது போன்ற பல பெருமைகளைக் கொண்டது இம்மன்றம்.

மெல்பர்ன், ரோம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்று சிங்கப்பூரை உலக அரங்கில் பிரதிநிதித்தனர். 

மன்றத்தின் முக்கியத் தருணங்களில் பங்கேற்ற இந்தியர்

மன்ற வரலாற்றின் பெரும்பாலான முக்கியத் தருணங்களில் பங்கேற்ற ஒரே இந்தியரான மன்றத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் பாலராஜூ, மன்றத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. 

அவரது தலைமைத்துவத்தின்கீழ், மன்றத்தின் நிதி இருப்பு வலுவடைந்ததோடு அதன் வசதிகளும் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டன. 

சமூக நோக்கத்திற்காக அவர் பல கோல்ஃப் நன்கொடை நிகழ்ச்சிகளையும் வழிநடத்தியுள்ளார். 

பாசிர் பாஞ்சாங் பகுதியில் 1970களில் வளர்ந்த, எளிமையான பின்னணியைச் சேர்ந்த திரு பாலகிருஷ்ணன், மன்றத்துடனான தமது 30ஆண்டுகாலப் பயணத்தை நினைவுகூர்ந்தார். 

“என்னுடைய நண்பர் ஒருவர் மீன்பிடிக்க சுங்கை பாண்டான் ஆற்றுக்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் அந்தத் தனிமையான கம்போங் பகுதியில் அந்த ‘வெள்ளைக்காரன்’ கிளப்பை முதன்முதலில் பார்த்தேன்,” என்றார் அவர். 

வாரயிறுதி நாள்களில் தமது குடும்பத்துடன் கிளப்பிற்கு சென்று பொழுதைக் கழித்ததை நினைவுகூர்ந்தார். 1996ஆம் ஆண்டில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகச் சேர்ந்த திரு பாலகிருஷ்ணன், 2005ஆம் ஆண்டிலிருந்து மூன்று தவணைகளில் மொத்தம் ஒன்பது ஆண்டுகள் மன்றத்தின் தலைவராகச் சேவையாற்றி வந்துள்ளார். 

முன்னாள் கடற்படைத் தலைவர் டாக்டர் கூ தம்மை செயற்குழுவில் சேர அழைத்ததாகவும் மற்ற பல பொறுப்புகளுக்கிடையே இந்தப் பொறுப்பையும் ஏற்க தொடக்கத்தில் தயக்கம் காட்டியதாகவும் கூறினார்.

“ஏழு பேர் கொண்ட குழுவிற்கு15 பேர் போட்டியிட்டோம். நான் ஏழாவது இடத்தில் ஒரே வாக்கில் வென்றேன். அந்த வாக்குதான் என்னை இத்தனை ஆண்டுகளாக இம்மன்றத்தில் பிணைத்திருந்தது,” எனப் புன்முறுவல் பூத்தார் திரு பாலகிருஷ்ணன்.

மூன்று ஆண்டுகளுக்குள் செயற்குழு உறுப்பினரிலிருந்து தலைவர் பதவிக்கு உயர்ந்த அவர், தமது தலைமைத்துவத்தில் பல இலக்குகளை வகுத்ததோடு அவற்றை நடைமுறையிலும் அமல்படுத்தினார். முதல் இரண்டு தவணைகளில் மன்றத்தை நவீனமயமாக்குவதில் முழுமையாக ஈடுபட்டார்.

அறைகளின் எண்ணிக்கையை 32லிருந்து 60ஆக விரிவுபடுத்தியது, படகுகளுக்கான ‘டிரை ஸ்டேக்’ (Dry Stack) சேமிப்பை ஐந்து அடுக்குகளுக்கு உயர்த்துதல் ஆகியவை அவர் சாதித்தவற்றுள் சில.

மன்றத்தின் வரலாற்றைப் பதிவுசெய்யும் நோக்கில் 2010ஆம் ஆண்டு ‘திரீ பெர்ஜீ புக்’ (Three Burgee Book) என்ற நூலை வெளியிட்டார்.

மன்றத்தின் வரலாற்றை விவரிக்கும் ‘திரீ பெர்ஜீ புக்’ (Three Burgee Book) நூலை 2010ஆம் ஆண்டு சிங்கப்பூரின் அன்றைய அதிபர் அமரர் எஸ்.ஆர்.நாதன் வெளியிட்டார்.
மன்றத்தின் வரலாற்றை விவரிக்கும் ‘திரீ பெர்ஜீ புக்’ (Three Burgee Book) நூலை 2010ஆம் ஆண்டு சிங்கப்பூரின் அன்றைய அதிபர் அமரர் எஸ்.ஆர்.நாதன் வெளியிட்டார். - படம்: சிங்கப்பூர்க் குடியரசு சொகுசுப் படகு மன்றம்

மன்றத்தின் அடுத்த 10, 20 ஆண்டுகள் குறித்துப் பேசிய அவர் சிங்கப்பூரில் கோல்ஃப் திடல்களுக்கும் இம்மன்றத்தின் எதிர்காலத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமையைச் சுட்டினார். 

தொடர்ச்சியின் சவால்

“இம்மன்றத்தின் ஆயுட்காலம் குத்தகைக் காலத்தைப் பொறுத்தது. அதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. தற்போது 2040 ஆண்டுவரை குத்தகை உள்ளது. தொடர்ச்சி தேவை, அதற்கு இன்னும் அதிகமான புதியவர்கள் தேவை.

“அதிகமான சிங்கப்பூரர்களை வரவேற்கிறோம். உறுப்பினராக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. இங்குள்ள உணவு பான, ஹோட்டல் வசதிகளைப் பயன்படுத்தலாம், பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இடத்தை முன்பதிவு செய்யலாம்,” என மன்றத்தின் எதிர்காலத்துக்கான தமது கனவுகளை முன்வைத்தார் திரு பாலகிருஷ்ணன். 

படகோட்ட விளையாட்டின் எதிர்காலம்

“படகோட்டம் பணக்காரர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும் மட்டுமே தொடர்புடைய விளையாட்டாக இருந்தது. அதை அனைவரையும் உள்ளடக்கியதாக ஆக்கியுள்ளோம்,” என்றார் மன்றத்தின் செயற்குழு உறுப்பினரும் அதன் இருநூற்றாண்டு விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான திரு கண்ணன் பன்னீர்செல்வம்.

“எந்நேரத்திலும் கடலில் நிலைமை மாறலாம். உடனுக்குடன் முடிவெடுக்க வேண்டும். இந்த விளையாட்டில் இளையர் பெறக்கூடிய திறன்கள் ஏராளம்,” என்ற திரு கண்ணன், இந்த விளையாட்டில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்களை ஊக்குவிக்க விரும்புகிறார். 

ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஆழ்கடல் முத்துக்குளித்தலில் (Scuba Diving) ஈடுபட்டு வரும் திரு கண்ணன் 2005ஆம் ஆண்டில் மன்றத்திற்கு அறிமுகமானார். படகு உரிமம் பெற்று, மன்றத்தின் வசதிகளைப் பயன்படுத்தி பிறகு உறுப்பினராகவும் சேர்ந்தார்.

“இம்மன்றத்தில் சேவையாற்ற ஆர்வமும் அர்ப்பணிப்பும் உள்ளவராக இருக்க வேண்டும். மன்றத்தின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டவராக இருப்பது முக்கியம்,” என்றார் திரு கண்ணன்.

குறிப்புச் சொற்கள்