தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீப்பற்றி எரிந்த வீட்டுக்கு வெளியே பிடிவாதமாய் காத்திருந்த குடியிருப்பாளர்

2 mins read
7560f3c3-bab1-4123-be15-878c223bc232
புகையைச் சுவாசித்ததற்காக தீப்பற்றி எரிந்த வீட்டின் குடியிருப்பாளர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். - படங்கள்: இணையம்

அங் மோ கியோ வீவக வீடு ஒன்றில் வெள்ளிக்கிழமை, ஜனவரி 17ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் தீப்பிடித்துக்கொண்டது.

அங் மோ கியோ அவென்யூ 3ன் புளோக் 211ல் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், ஒருவர் புகையைச் சுவாசித்ததற்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அண்டைவீட்டாருக்கு வெடிப்புச் சத்தம் கேட்டதுடன் ஏதோ பற்றியெரிவது போன்ற வாடை வீசியது.

தமது வீட்டிலிருந்து வெளியேறிய 78 வயது திருவாட்டி யூ, தமக்கு மேல்மாடியில் இருந்த வீட்டிலிருந்து புகை வருவதைக் கவனித்தார்.

இதற்கிடையே, வீடு வீடாகச் சென்று நெருப்பு குறித்து அவர் தம் அண்டைவீட்டாருக்கும் தெரிவிக்கலானார்.

தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த வீட்டுக்கு அவர் சென்றபோது, அவ்வீட்டின் உரிமையாளர் கதவுக்கு வெளியே நின்றிருப்பதைப் பார்த்தார் திருவாட்டி யூ.

அங்கிருந்து உடனே போய்விடுமாறு திருவாட்டி யூ கூச்சலிட்டும், அந்தப் பெண் நகர மறுத்துவிட்டார். வீட்டிலிருந்து குபுகுபுவெனப் புகை வந்த நிலையிலும், தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுகூட அந்தப் பெண் திருவாட்டி யூவிடம் கூறிவிட்டார்.

சுமார் ஐந்து நிமிடங்கள் பெண்ணின் மனதை மாற்ற முயற்சி செய்ய பிறகு, வேறு வழியின்றி அங்கிருந்து சென்றுவிட்டார் திருவாட்டி யூ.

வழிபாட்டின்போது கவனிக்கப்படாத நெருப்பு காரணமாக இந்தத் தீச்சம்பவம் நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீப்பற்றி எரிந்த வீட்டின் ஒரே குடியிருப்பாளர் அந்தப் பெண் என்று வட்டார எம்பி யிப் ஹோன் வெங் தெரிவித்தார்.

வீட்டின் சுவர்கள், உட்கூரை ஆகியவற்றுக்குக் கடும் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் வீவக வீட்டின் சன்னல்களும் வெப்பத்தில் சிதறியதால், நடைபாதை எங்கும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் கிடந்தன.

குறிப்புச் சொற்கள்