தீத்தடுப்புத் திறன்களை குடியிருப்பாளர்கள் அறிந்திருக்க வேண்டும்: எட்வின் டோங்

தீத்தடுப்புத் திறன்களை குடியிருப்பாளர்கள் அறிந்திருக்க வேண்டும்: எட்வின் டோங்

2 mins read
522d4096-23c4-4df6-8022-c6d231d43cd9
ஜூ சியாட்டில் நடைபெற்ற தீத்தடுப்புப் பயிற்சியில் அமைச்சர் எட்வின் டோங்கும் பங்கேற்று தீயை அணைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வீடுகளில் நிகழும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளதால் அவற்றைத் தடுப்பதும் சமாளிப்பதும் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சட்ட அமைச்சரும் 2ஆம் உள்துறை அமைச்சருமான எட்வின் டோங் கூறியுள்ளார்.

தீ விபத்துகளின்போது என்ன செய்ய வேண்டும் என்பதை குடியிருப்பாளர்கள் அறிந்திருப்பது முக்கியம் என்று ஜூ சியாட்டில் (மார்ச் 29) நடைபெற்ற தீத்தடுப்பு நிகழ்ச்சியில் அவர் வலியுறுத்தினார்.

தீப்பற்றிய அடுப்புமீது தண்ணீர் ஊற்றுவது பொதுவான தவறாகும். அங்கு ‘கிரீஸ்’ மற்றும் எண்ணெய் இருப்பதால் அது தீயை மேலும் பரவச் செய்துவிடும்.

ஜூ சியாட்டில் தனியாக வசித்து, தனியாக சமைக்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறிப்பாக வீடுகளில் தீ அதிவேகமாகப் பரவும் என்பதால் குடியிருப்பாளர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படித் தயாராக இருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் 2025ல் 2,050 தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இது, இதற்கு முந்தைய ஆண்டில் நிகழ்ந்த 1,990 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும்.

ஏறக்குறைய பாதி தீச்சம்பவங்கள் குடியிருப்புக் கட்டடங்களில் நிகழ்ந்துள்ளன. கவனிக்கப்படாத அடுப்புகள், மின்கசிவு போன்றவை இவற்றுக்கு முக்கிய காரணங்களாகும் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) அதன் பிப்ரவரி 11ஆம் தேதி ஆண்டறிக்கையில் தெரிவித்தது.

2025ல் ஆறு பேர் தீச்சம்பவங்களில் மாண்டதாகத் தனது அண்மை அறிக்கையில் எஸ்சிடிஎஃப் குறிப்பிட்டுள்ளது. 2024ல் நேர்ந்த தீவிபத்துகளில் ஏழு பேர் உயிரிழந்தனர்; 80 பேர் காயம் அடைந்தனர்.

ஜூ சியாட் அவசரகால தயார்நிலை தினத்தின்போது கிட்டத்தட்ட 300 குடியிருப்பாளர்களுக்கு தீத்தடுப்பு நடவடிக்கைகளை எஸ்சிடிஎஃப் அதிகாரிகள் கற்றுத் தந்தனர். உண்மையான தீயை தீயணைக்கும் சாதனங்களால் அணைப்பது எப்படி என்பதை அதிகாரிகள் நேரடியாக செய்துகாட்டினர்.

கம்போங் சிக்லாப் வாழ்நாள்திறன் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இதயத்துடிப்பை மீட்கச் செய்யும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்