விமானப் பயணத்தின்போது கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படும் குழந்தைகளுக்காக கேகே மகளிர், சிறார் மருத்துவமனை சிறப்புப் பரிசோதனை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
உயரத்தில் பறக்கும் விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு மூச்சிலும் உடலுக்குக் கிடைக்கும் உயிர்வளி அளவு குறைகிறது. சாதாரணமானவர்களால் அதனைச் சமாளிக்க முடிந்தாலும் நாள்பட்ட நுரையீரல் நோய் அல்லது சுவாசத் தசை பலவீனம் உள்ள குழந்தைகளுக்கு இது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும்.
அதனைக் கண்டறிய ‘ஹைப்பாக்சிக் சாலஞ்ச்’ எனும் பரிசோதனை உதவுகிறது. சிங்கப்பூரில் சிறார்க்கு இப்பரிசோதனையை வழங்கும் முதல் பொதுச் சுகாதார நிறுவனம் கேகே மருத்துவமனை என்று அதன் சுவாச மருத்துவப் பிரிவின் தலைவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் பிஜு தாமஸ் தெரிவித்தார்.
பரிசோதனையின்போது, விமானத்தின் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில், ஏறத்தாழ 15 விழுக்காடு உயிர்வளி செறிவுகொண்ட காற்றைச் சிறுவர்கள் 20 நிமிடங்களுக்குச் சுவாசிப்பர். அப்போது அவர்களின் இதயத் துடிப்பும் ரத்த உயிர்வளி அளவும் கண்காணிக்கப்படும். கூடுதல் உயிர்வளியின்றி, அவர்களின் உயிர்வளி அளவு 90 விழுக்காடு அல்லது அதற்கு மேல் தொடர்ந்தால் அவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம் என்று முடிவெடுக்கப்படும்.
நிமிடத்திற்கு இரண்டு அல்லது நான்கு லிட்டர் உயிர்வளி தேவைப்பட்டால், கூடுதல் உயிர்வளி உதவியுடன் பயணம் செய்யப் பரிந்துரைக்கப்படும். அதன் பிறகும் பாதுகாப்பான அளவை எட்ட முடியாவிட்டால் விமானப் பயணம் தவிர்க்கப்பட வேண்டும்.
நான்கு வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘வென்டூரி’ முகக்கவசம் மூலமும் நான்கு வயதுக்கு உட்பட்டோருக்குச் சிறப்பு அறையிலும் இப்பரிசோதனை நடத்தப்படுகிறது.
நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, தொடர் உயிர்வளி சிகிச்சை பெற்றவர்கள், ரத்தத்தில் கரியமில வாயு அதிகம் உள்ள குழந்தைகளுக்கு இது பெரிதும் பயனளிக்கும். 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இச்சேவையின் மூலம் இதுவரை 15 சிறுவர்கள் பயனடைந்துள்ளனர்.
விமானப் பயணத்திற்கு குறைந்தது இரு வாரங்களுக்கு முன்பே இப்பரிசோதனையை செய்துகொள்ளுமாறு டாக்டர் தாமஸ் அறிவுறுத்தினார்.
நடுவானில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு விமானத்தைத் திருப்பிவிட நேரிடும் அவசரநிலையைத் தவிர்க்க இச்சோதனை மிகவும் அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார். மருத்துவர்களின் விரிவான பரிந்துரைக் கடிதத்துடன் வெளிநோயாளிகளாகவும் இப்பரிசோதனையை செய்துகொள்ளலாம்.
