மே மாதத்திலும் நீடித்தது சில்லறை விற்பனையின் வளர்ச்சி

மே மாதத்திலும் நீடித்தது சில்லறை விற்பனையின் வளர்ச்சி

2 mins read
811acffc-aa18-4a15-a907-321de97486dc
மே மாதத்தில் சில்லறை விற்பனை, ஆண்டு அடிப்படையில் 3 விழுக்காடு கூடியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சில்லறை விற்பனை மே மாதத்திலும் தொடர்ந்து சாதகமான நிலையிலேயே நீடித்தது. இருப்பினும், அதன் வளர்ச்சி வேகம் குறைந்ததுடன் முந்திய மாதத்தை விட மக்கள் செலவிட்டதும் குறைந்தது.

சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத் துறை திங்கட்கிழமை (ஜூலை 6) வெளியிட்ட தரவுகளில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மே மாதத்தில் சில்லறை விற்பனை, ஆண்டு அடிப்படையில் 3 விழுக்காடு கூடியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் பதிவான 5.4 விழுக்காட்டு உயர்வின் தொடர்ச்சி.

மோட்டார் வாகனங்கள், அவற்றின் பாகங்கள், உபகரணங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும்போது சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் 3.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் பதிவான 4.5 விழுக்காட்டைக் காட்டிலும் சற்றுக் குறைவு.

மாதாந்தர அடிப்படையில் ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் சில்லறை விற்பனை குறைந்தது. அது 2.3 விழுக்காடு சரிவைச் சந்தித்தது. மோட்டார் வாகனங்கள், பாகங்கள், உபகரணங்களைத் தவிர்த்து, மே மாத விற்பனை அதற்கு முந்திய மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.8 விழுக்காடு இறங்கியது.

மே மாதத்தின் ஒட்டுமொத்தச் சில்லறை விற்பனை $4.5 பில்லியன் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில் இணையத்தில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் பங்கு15.1 விழுக்காடு.

சில்லறை வர்த்தகத்தில் பெரும்பாலான துறைகள் ஆண்டு அடிப்படையில் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.

இவற்றில் ஆக அதிகமாக, பொழுதுபோக்குப் பொருள்களின் விற்பனை 23.6 விழுக்காடு ஏற்றங்கண்டது. கடிகாரங்கள், நகைகளின் விற்பனை 11.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேநேரம், எரிபொருள் விலை உயர்ந்ததன் காரணமாக, பெட்ரோல் நிலையங்களின் விற்பனை 9.5 விழுக்காட்டு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்கு நேர்மாறாக, உணவு, மதுபானச் சில்லறைக் கடைகளின் விற்பனை ஆண்டு அடிப்படையில் 3.7 விழுக்காடு குறைந்தது. பகுதிவாரிக் கடைகளின் விற்பனை 3.3 விழுக்காடு இறங்கியது.

ஆயினும், சில்லறை வர்த்தகத்தில் பெரும்பாலான துறைகளின் விற்பனை மாதாந்தர அடிப்படையில் பலவீனமடைந்தது.

இதற்கிடையே, உணவு-பானச் சேவைத் துறை ஆண்டு அடிப்படையில் அதிக மாற்றமின்றி இருந்தது. அந்தத் துறையின் ஒட்டுமொத்த விற்பனை மே மாதத்தில் $1.7 பில்லியன். அதில் இணையப் பரிவர்த்தனைகளின் பங்கு 19.8 விழுக்காடு. ஏப்ரல் மாதம் பதிவான 19.9 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் அது சற்றுக் குறைவு.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சில்லறை விற்பனைமுன்னுரைப்புபொருளியல்