தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையோர வாகன நிறுத்துமிட கட்டண வசூல் முறை குறித்து பரிசீலனை

2 mins read
10f95beb-c43a-4c13-8602-b2ae4ffa80b5
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிமுகத் திட்டத்தின்கீழ் தரையில் பொருத்தப்படும் உணர்கருவிகளைக் கொண்டு சாலையோர வாகன நிறுத்துடிடத்துக்குள் வாகனங்கள் எப்போது நுழைகிறது அல்லது வெளியேறுகிறது என்பதை உணர்கருவிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்காலத்தில் சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் வாகனத்தை நிறுத்தும்போது அதற்கான கட்டணத்தை வசூலிக்க தரையில் பொருத்தப்படும் உணர்கருவிகள் பயன்படுத்தப்படக்கூடும்.

தரையில் பொருத்தப்படும் உணர்கருவிகளைக் கொண்டு சாலையோர வாகன நிறுத்துமிடத்துக்குள் வாகனங்கள் எப்போது நுழைகிறது அல்லது வெளியேறுகிறது என்பதை உணர்கருவிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இதன்மூலம் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் முன்னோட்டத் திட்டத்தின்கீழ் இது சாத்தியமாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணுகுமுறை எந்த அளவுக்குத் துரிதமாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க ஆய்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பரிந்துரைகளுக்கு ஆணையம் மே மாதம் 6ஆம் தேதியன்று ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுத்தது.

வாகன ஓட்டுநர்களுக்குச் சௌகரியமாக புளூடூத் தொடர்புமுறையைப் பயன்படுத்தி தானியங்கி கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்துவது சாத்தியப்படுமா என்பதைக் கண்டுபிடிக்க ஆய்வு நடத்தப்படுவதாக மே 29ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஆணையம் கூறியது.

தரையில் பொருத்தப்படும் உணர்கருவிகள் தட்டையாக இருக்கும் என்றும் அவற்றின் மீது வாகனங்களை எளிதில் ஓட்டிச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு காகிதச் சீட்டுகள் அல்லது Parking.sg செயலி மூலம் கட்டணம் செலுத்தப்படுகிறது.

சாலையோர வாகன நிறுத்துமிடத்துக்கான கட்டணத்தைச் செலுத்த ஓபியு கருவியைப் பயன்படுத்துவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் கொண்டுள்ள திட்டத்துடன் நகர மறுசீரமைப்பு ஆணையம் நடத்தும் ஆய்வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

அனைத்து வாகனங்களிலும் ஓபியு கருவி பொருத்தப்பட்டதும் சாலையோர வாகன நிறுத்துமிடத்தில் வாகன நிறுத்திவைப்பு நேரத்தைத் தொடங்க ஓபியு கருவியின் தொடுதிரையைப் பயன்படுத்தும் அம்சம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

வாகன நிறுத்துமிடத்திலிருந்து வாகனம் வெளியேறியதும் வாகன நிறுத்திவைப்பு நேரம் தானியங்கி முறையில் முடிவடையும்.

குறிப்புச் சொற்கள்