கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் சிறிய இயந்திர மனிதனைச் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழக (எஸ்யுடிடி) ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
‘சேபில்’ என்ற அந்த காலணிப் பெட்டி வடிவிலான இயந்திர மனிதன், குறுகலான, எளிதில் செல்ல இயலாத இடங்களுக்கும் சென்று சோதிக்கவல்லது.
நீர் தேங்கியுள்ளதா என்பதை சேபிலில் பொருத்தப்பட்டுள்ள படக்கருவி மூலம் கண்டறியலாம். அதனுடன் தெளிப்பானும் இணைக்கப்பட்டுள்ளதால் தொலைவிலிருந்தபடியே பராமரிப்பு ஊழியர்கள் தேவைப்படும் இடங்களில் கொசுமுட்டைகளை அழிக்கும் மருந்தைத் தெளிக்க முடியும்.
சேபில் இயந்திர மனிதனை ஜாலான் புசார் நகர மன்றம் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் களத்தில் இறக்கியது. இது, எதிர்காலத்தில் வீடமைப்புப் பேட்டைகளில் கூரைப்பகுதியிலும் வடிகால்களிலும் சோதனைமுறைகளை மாற்றியமைக்கக்கூடும்.
“சேபிலின் துணையால் குறுகலான, உயரமான பகுதிகளிலும் வடிகால்களிலும் பாதுகாப்பாகச் சோதனைகளை மேற்கொள்ள முடிகிறது. அத்துடன், அது விரிவான காட்சித் தரவுகளையும் வழங்குகிறது,” என்று ஜாலான் புசார் நகர மன்றத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், பேட்டை நிர்வாகத்தில் எந்திரனியலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நகர மன்றம் தொடர்ந்து மதிப்பிடும் என்றும் அவர் சொன்னார்.
சாலையோர வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியவும் பொய்க்கூரைகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் சேபிலைப் பயன்படுத்தலாம் என்று எஸ்யுடிடி இணைப் பேராசிரியர் மோகன் ராஜேஷ் இலாரா கூறினார்.
வழக்கமாக, சோதனைப் பணிகளுக்கு இரண்டு அல்லது மூன்று பேர் தேவைப்படும் நிலையில், சேபிலைப் பயன்படுத்தும்போது ஒருவர் மட்டுமே போதும் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
‘கிம் இயூ இன்டகிரேட்டட்’ எனும் நிறுவனம் சேபிலுக்கான உரிமத்தை எஸ்யுடிடியிடமிருந்து பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளது. அத்துடன், அதனை குத்தகைக்குவிடத் திட்டமிடுவதாகவும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பேட்ரிக் டான், 41, தெரிவித்தார்.
மேலும், எஸ்யுடிடி உருவாக்கிய ‘டிராகன்ஃபிளை’ எனும் இன்னோர் இயந்திர மனிதனை குத்தகைக்குவிடவும் கிம் இயூ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
பள்ளிகள், பூங்காக்கள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் சுதந்திரமாக நடமாடி, கொசுக்களைப் பிடிக்கும் வகையில் டிராகன்ஃபிளை வடிவமைக்கப்பட்டுள்ளது.