‘பிடிஓ’ கட்டுமானத் தளங்களில் இயந்திர மனிதக் கருவிகள்

‘பிடிஓ’ கட்டுமானத் தளங்களில் இயந்திர மனிதக் கருவிகள்

2 mins read
2025ஆம் ஆண்டுமுதல் சுவர்களுக்குச் சாயம் பூசுதல், பூச்சுவேலை
28a4c4f5-ee95-4576-9c55-dee86ca789fd
கட்டுமானத் தளங்களில் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில் பிடிஓ திட்டங்களில் சுமார் பாதி எண்ணிக்கைக்கு இயந்திர மனிதக் கருவிகள் பயன்படுத்தப்படும். - படங்கள்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

சிங்கப்பூரின் தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) வீட்டுத் திட்டங்களில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கைக்கு, 2025ஆம் ஆண்டுமுதல் இயந்திர மனிதக் கருவிகள் பயன்படுத்தப்படலாம்.

சுவருக்குச் சாயம் பூசுதல், பூச்சு வேலை போன்ற பணிகளை அவை மேற்கொள்ளலாம். அத்துடன், கண்காணிக்கவும் வேறு இடத்திலிருந்து மேற்பார்வையிடவும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படக்கூடும்.

கட்டுமானத் தளங்களில் உற்பத்தித் திறனையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் முயற்சிகளில் இந்தத் திட்டமும் அடங்கும் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் அக்டோபர் 23ஆம் தேதி தெரிவித்தார்.

வீவகவின் நிபுணத்துவ ஈடுபாட்டு, அறிவாற்றல் பகிர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், புதிய பிடிஓ தளங்களில் சுமார் பாதி இடங்களில் சாயம் பூசுதலுக்காகவும் பூச்சு வேலை மேற்கொள்வதற்காகவும் 2025ஆம் ஆண்டுமுதல் இயந்திர மனிதக் கருவிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

இயந்திரவியல், தானியக்கக் கருவிகளை இவ்வாறு பயன்படுத்தும்போது உயர் மதிப்புடைய வேறு பணிகளுக்காக ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க இயலும் என்றார் திரு டான்.

பொது வீடமைப்புக் கட்டுமானத் தளங்களில் 2030ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை 40% மேம்படுத்த வேண்டும் என்ற வீவகவின் நோக்கத்தின்கீழ் இந்தத் திட்டங்கள் அடங்கும். 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, அந்த இலக்கில் 26.2 விழுக்காட்டை அடைந்துவிட்டதாக வீவக முன்னதாகக் கூறியிருந்தது.

இயந்திர மனிதக் கருவிகளைக் கொண்டு 2023ஆம் ஆண்டுமுதல் பல்வேறு பிடிஓ தளங்களில் நடத்தப்பட்ட முன்னோட்டத் திட்டங்கள் மொத்தம் 10 என்று தெரிவித்த வீவக, அவை நம்பிக்கையளிக்கும் முடிவுகளை ஈட்டித் தந்ததாகக் குறிப்பிட்டது.

தனது இயந்திர மனிதக் கருவி, நான்கறை வீடு ஒன்றுக்குச் சாயம் பூச சுமார் 90 நிமிடங்களாகும் என்று உள்ளூர் நிறுவனம் ஒன்று தெரிவித்தது. வழக்கமாக இத்தகைய பணியை முடிப்பதற்கு மூன்று ஊழியர்கள் கிட்டத்தட்ட 70 நிமிடங்கள் எடுத்துக்கொள்வர் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, 2023ஆம் ஆண்டுமுதல் 43 திட்டங்களில் அடங்கிய சுமார் 34,500 பிடிஓ வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக திரு டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்