திறந்தவெளியில் உறங்கும் இளையர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
8f09f0a6-8104-4d73-ba86-0aa6e4bb8f26
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சென்ற ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில், வீடின்றித் திறந்தவெளிகளில் உறங்குவோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாகத் தெரியவந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடின்றித் திறந்தவெளியில் உறங்குவோர் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு சற்று குறைந்தது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்திய கணக்கெடுப்பில் தீவு முழுவதும் மொத்தம் 496 பேர் திறந்தவெளியில் உறங்கியது தெரியவந்தது.

இந்த எண்ணிக்கை 2022ல் ஓர் இரவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பதிவாகிய 530 பேரைவிட 6.4 விழுக்காடு குறைவு என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2022ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், 30 வயதும் அதற்கும் குறைவான வயதில் திறந்தவெளிகளில் உறங்குவோரின் எண்ணிக்கை 3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை (ஜனவரி 7) பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, மக்கள் முதலில் திறந்தவெளிகளில் உறங்குவது சட்டவிரோதமானதன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.

பெரும்பாலும் ஆண்களே வீடுகளைவிட்டு அல்லது வீடுகளின்றி திறந்தவெளிகளில் உறங்குகின்றனர். அவர்கள் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள். அவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் சீன இனத்தவர்கள்.

திறந்தவெளிகளில் உறங்குவோர் பெரும்பாலும் நீண்ட இருக்கைகள், நாற்காலிகள் அல்லது வெளிச்சமான, ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள மேசைகளில் உறங்குவதாக நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் நீண்டகாலமாகத் திறந்தவெளியில் உறங்கி வருகின்றனர். அவர்கள் நடைமுறை, சமூகத் தேவைகள் காரணமாகப் பெரும்பாலும் ஒரே இடத்திலேயே உறங்குவதும் தெரியவந்தது.

வீட்டுவசதி, சமூகச் சிக்கல்கள் ஆகியவை அவர்கள் வெளியில் உறங்குவதற்கான முதன்மைக் காரணங்களாக இருந்தன. அவர்களில் 47 விழுக்காட்டினர் திறந்தவெளிகளில் உறங்கினாலும், அவர்கள் திரும்பிச் செல்ல ஓர் இடமும் இருந்தது.

அவர்களில் 57 விழுக்காட்டினர் நிலையான, நீண்டகால வீட்டுவசதியைப் பெறத் திட்டமிட்டுள்ளனர்.

புக்கிட் மேரா, ஜூரோங் வெஸ்ட், பிடோக் ஆகிய இடங்களில் திறந்தவெளிகளில் உறங்குவோரின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவானது

மூவாண்டு ஆய்வு

திறந்தவெளிகளில் உறங்குவோரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகம் அத்தகைய 128 பேரிடம் ஆய்வு நடத்தியது.

அதில் நீண்டகாலமாக வீடற்ற நிலை என்பது முன்பு கருதப்பட்டதைவிட மிகவும் சிக்கலானதும் வேறுபட்டதும் எனக் கண்டறியப்பட்டது.

சிறுவயது, இளமைப் பருவம், முதுமை என வாழ்நாள் முழுமைக்குமான பல்வேறு காரணங்களால் அவர்கள் இந்த நிலைக்குத் தள்ளப்படுவதாக ஆய்வு காட்டியது.

வீடற்ற நிலையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாளின் பல்வேறு கட்டங்களில், பலவிதமான மன அழுத்தக் காரணிகளை அனுபவிக்கும் போக்கைக் கொண்டுள்ளனர் என்பதும் ஆய்வில் தெரியவந்தது.

குறிப்பாக, திருமண உறவிலிருந்து பிரிந்தவர்கள், மணவிலக்கு பெற்றவர்கள் அல்லது கைம்பெண்களாக இருப்பவர்களும், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களிலிருந்து வருவோரும் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்வது தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்