நோய்வாய்ப்பட்ட கப்பல் சிப்பந்தியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ‘ஆர்எஸ்ஏஎஃப்’ ஹெலிகாப்டர்

1 mins read
5001f31b-ffea-4529-a326-df9c5979df2a
சிங்கப்பூர் ஆகாயப் படையின் (ஆர்எஸ்ஏஎஃப்) ரெஸ்கியூ 10 பிரிவு நோய்வாய்ப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. - படம்: ஆர்எஸ்ஏஎஃப் / ஃபேஸ்புக்

பெரிய கப்பல் ஒன்றில் பணிபுரியும் நோய்வாய்ப்பட்ட சிப்பந்தியை சிங்கப்பூர் ஆகாயப் படையினர் (ஆர்எஸ்ஏஎஃப்) ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் சனிக்கிழமையன்று (நவம்பர் 9) நிகழ்ந்தது. கப்பல் சிப்பந்தி ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்பட்டதைத் தொடர்ந்து மாலை 5.30க்கு சிங்கப்பூர் ஆகாயப் படையின் தேடல், மீட்புப் படையின் ‘ரெஸ்கியூ 10’ (Rescue 10) பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்ட ஆடவர் ஒருவர், எச்225எம் (H225M) ரக ஹெலிகாப்டரில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று சிங்கப்பூர் ஆகாயப் படையின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆகாயப் படையினர் அந்த ஆடவரை மருத்துவமனையிடம் ஒப்படைக்கும்போது அவர் சீரான நிலையில் சுயநினைவுடன் இருந்ததாகத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

இது, இவ்வாண்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, ரெஸ்கியூ 10 பிரிவு வெற்றிகரமாக மேற்கொண்ட ஏழாவது மீட்பு நடவடிக்கையாகும். எந்நேரமும் பணியில் ஈடுபடத் தயாராய் இருக்கும் மருத்துவப் பணியாளர்கள், ஆகாய மற்றும் நிலத்தில் நிகழும் சம்பவங்களைக் கையாளும் ஊழியர்கள் ஆகியோர் ரெஸ்கியூ 10 பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்