ஆஸ்திரேலியாவின் ராக்ஹாம்டன் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் (ஆர்எஸ்ஏஎஃப்) புதிய ‘வாரியர்ஸ் டென்’ தளம், ‘வாலபி 2026’ பயிற்சியின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தியுள்ளது.
முப்பதுக்கும் மேற்பட்ட அலுவலகங்கள், கான்கிரீட் தளங்களைக் கொண்ட இந்த நவீன நிலையத்திலிருந்து புறப்படும் ‘சிஎச்-47எஃப் சினூக்’ ஹெலிகாப்டர்கள், சிங்கப்பூரை விட ஐந்து மடங்கு பெரிய ஷோல்வாட்டர் பே பயிற்சி நிலையத்தில் தரைப்படை வீரர்களை விரைவாகக் களமிறக்கி, அவர்கள் யதார்த்தமான போர்க்களச் சூழலில் கூடுதல் திறம்படப் பயிற்சி பெற வழிவகுக்கின்றன.
ஒருங்கிணைந்த ‘ஹெலிபோர்ன்’ நடவடிக்கையில் வீரர்களை ஏற்றிச்செல்லும் சினூக் ஹெலிகாப்டர்களுக்கு ‘ஏஎச்-64டி அப்பாச்சி’ போர் ஹெலிகாப்டர்கள் வான்வழிக் கவசமாகச் செயல்படுகின்றன.
அப்பாச்சியின் அதிநவீன உணர்க் கருவிகள், ரேடார் மூலம் தரையிலுள்ள அச்சுறுத்தல்கள் முன்கூட்டியே களையப்பட்டு, வீரர்கள் இறங்கும் தளம் பாதுகாக்கப்படுகிறது. “சினூக் இறங்கும் தளம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே எங்கள் தலையாய பணி.
திட்டமிடும்போதே சந்திக்கக்கூடிய அனைத்துப் பாதகங்களையும் ஆராய்ந்துவிடுவதால், வான் நடவடிக்கைகளை மிகத் துல்லியமாகச் செயல்படுத்த முடிகிறது,” என்கிறார் 120வது படைப்பிரிவைச் சேர்ந்த 28 வயது அப்பாச்சி விமானி கேப்டன் கிளமென்ட் லியூ கை சோங்.
ஹெலிகாப்டர்களில் செயல்படும் வீரர்களின் தீவிரப் பயிற்சி
ஷோல்வாட்டர் பேயில் குடியிருப்புப் பகுதிகள் இல்லாததால், அனுமதிக்கப்பட்ட உச்சக்கட்ட வேகத்திலும் மிகக் குறைந்த உயரத்திலும் பறந்து ஹெலிகாப்டர்கள் பயிற்சி பெறுகின்றன. வீரர்கள் ஏறும், இறங்கும் நடைமுறைகள் முன்கூட்டியே தீவிரமாக ஒத்திகை பார்க்கப்படுவதால், களத்தில் நொடிப் பொழுதில் வீரர்கள் பாதுகாப்பாகத் தரையிறக்கப்படுகின்றனர்.
“நான்கு சினூக், நான்கு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் இணைந்து செயல்பட ஷோல்வாட்டர் பேயின் பரந்துவிரிந்த நிலப்பரப்பு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது.
“மக்கள் நடமாட்டமற்ற சூழலில், அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்திலும் குறைந்த உயரத்திலும் பறந்து எங்கள் உத்திகளைச் சோதிக்க முடிகிறது,” என்கிறார் ஓக்கிப் படைப்பிரிவின் 30 வயது சினூக் விமானி கேப்டன் எங் ஜியா ஜியே.
முன்களப் பொறியியல் ஆதரவு
கிளென் விமானத்தளத்தில் ஹெலிகாப்டர்களுக்கு விரைவாக எரிபொருள் நிரப்புதல், ஆயுதங்களை ஏற்றுதல் முதலிய பணிகளைப் பொறியியல் குழுவினர் மேற்கொள்கின்றனர்.
“ஹெலிகாப்டர்களின் இயந்திரங்கள் இயங்கும்போதே, உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் விழிப்புடன் செயல்பட்டு விரைவுப் பணிகளை முடிக்கிறோம். சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு இடையிலும் புழுதி நிறைந்த களச்சூழலிலும் எங்கள் தீவிரப் பயிற்சிகள் காரணமாகப் பராமரிப்புப் பணிகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்கின்றன,” என்கிறார் 29 வயது ராணுவப் பொறியியல் நிபுணர் எம்இ4 ஆட்ரி ஓயோங் யு டிங்.
திட்டமிடல், வான்வழிப் பணிக்கான விளக்கம், விமானத் தயாரிப்பு முதல் விமான இயக்கம் வரை சிக்கலான வேலைகளைப் பாதுகாப்பாகவும் திறம்படவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழுமையான ஒருங்கிணைப்பை இந்த ‘ஹெலிபோர்ன்’ நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.
‘வாலபி’ போர்ப்பயிற்சி வழங்கும் இத்தகைய யதார்த்தமான களச் சூழல் வீரர்களின் தனிப்பட்ட திறனையும் படைப்பிரிவின் போர்த் தயார்நிலையையும் வலுப்படுத்திப் பெரியதொரு போர்ப்பணியின்போது ஒருங்கிணைந்த அங்கமாக அவர்கள் வெற்றிகரமாகச் செயல்பட உதவுகிறது.
