மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் நோக்கில், ஓட்டுநர்களுக்கான மதுபான வரம்பு பாதிக்கும் மேலாகக் குறைக்கப்படவுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வகையில் முதன்முறையாகப் பிடிபடுவோர்க்கும், அவர்களது ரத்தத்தில் அதிக அளவு மதுபானம் இருந்தால், சிறைத்தண்டனை விதிக்கவும் உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) உள்துறை அமைச்சின் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தாக்கல் செய்த சாலைப் போக்குவரத்துச் (பல்வகைத் திருத்த) சட்ட மசோதாவில் இவ்விவரம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைக் குறைக்கும் நோக்கில், மூச்சுக்காற்றில் 35 மைக்ரோகிராமுக்கு மேலும், ரத்தப் பரிசோதனையில் 80 மில்லிகிராமுக்கு மேலும் இருப்பது குற்றமாகக் கருதப்படும்.
இந்நடவடிக்கையானது சிங்கப்பூரின் வரம்பை ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளின் விதிமுறைகளுக்கு நிகராகக் கொண்டுவரும் என்று அமைச்சு தெரிவித்தது.
“ஒருவர்மீது மதுபானத்தின் தாக்கம் என்பது பாலினம், வயது, உடல்நலம், உடலமைப்பு போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். வாகனம் ஓட்டுவதற்குமுன் மது உட்கொள்ள ‘பாதுகாப்பான அளவு’ என்று எதுவும் இல்லை,” எனவும் அமைச்சு எச்சரித்துள்ளது.
யாரும் அறியாமல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதில்லை; நன்கு தெரிந்தே தமக்கும் சாலையில் வாகனம் ஓட்டும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் செயலில் அக்குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர் என்றும் அமைச்சு விளக்கியது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வகையில் முதன்முறை பிடிபடும் குற்றவாளிகளுக்கான சிறைத்தண்டனை வழிகாட்டுதல் தொடர்பில், அமைச்சு தண்டனை ஆலோசனைக் குழுவுடன் இணைந்து பணியாற்றும்.
இந்தச் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், போக்குவரத்துக் காவல்துறையினர் புதிய சுவாசப் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி, அதன்மூலம் பெறப்படும் அளவீடுகளைக் கொண்டு குற்றவாளிகளை உடனடியாகச் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தலாம்.
தற்போது, அதிகாரிகள் சம்பவ இடத்தில் முதற்கட்ட மூச்சுப் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். பின்னர் சந்தேகப் பேர்வழியைத் தடுப்புக்காவல் பிரிவுக்கு அழைத்துச் சென்று, மற்றொரு கருவியைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.
இரண்டாவது பரிசோதனை மட்டுமே நீதிமன்ற ஆதாரமாகப் பயன்படுத்தப்படும். இவ்விரண்டுக்கும் இடையிலான கால இடைவேளையினால், முதற்கட்டப் பரிசோதனையைவிட இரண்டாம் முறை பரிசோதிக்கும்போது உள்ள மதுபான அளவு குறைகிறது.
மேலும், இப்புதிய சட்டத் திருத்தத்தின்கீழ், சந்தேகப் பேர்வழிகளின் ரத்த மாதிரியைப் பரிசோதிக்கும் முறையும் மாற்றம் காணவுள்ளது.

