சிங்கப்பூர் ஆயுதப் படை துணைத் தளபதி பதவி விலகல்; தேர்தலில் போட்டியிடக்கூடும்

1 mins read
4de469cc-f9bc-4dda-97cb-c0bc707b8a6e
பிரிகேடியர்-ஜெனரல் கோ பெய் மிங். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஒட்டுமொத்த ஊழியர் செயல்பாடுகளுக்கான துணைத் தளபதி (Chief of Staff – Joint Staff) கோ பெய் மிங் பதவி விலகியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் அவர் களமிறக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. ராணுவத்தில் பிரிகேடியர்-ஜெனரல் பதவி வகித்த அவர், திங்கட்கிழமைதான் (மார்ச் 31) சிங்கப்பூர் ஆயுதப் படையில் தனது கடைசி நாள் என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உறுதிப்படுத்தினார்.

தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தோ தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் பற்றியோ திரு கோ கருத்து தெரிவிக்கவில்லை. 42 வயதாகும் அவர், துணைக் கண்காணிப்பாளர், தலைமை நீடித்த நிலைத்தன்மை அதிகாரி ஆகிய பொறுப்புகளையும் வகித்தவர்.

கடந்த சில வாரங்களில் பல்வேறு அரசாங்கத் துறை அதிகாரிகள் பதவி விலகிவந்துள்ளனர். பதவி விலகிய மூத்த அதிகாரிகள் பொதுத் தேர்தலில் களமிறக்கப்படலாம் என்று கூறப்பட்டுவருகிறது.

திரு கோ, சிங்கப்பூர் ஆயுதப் படையில் பல்வேறு மூத்த தளபத்தியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

அவர் 2022ஆம் ஆண்டுக்கான தேசிய தின அணிவகுப்பின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். முன்னதாக ஆப்கானிஸ்தானிலும் அவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்