பாய லேபாரில் உள்ள பாய லேபா ஸ்குவேர் (Paya Lebar Square) கடைத்தொகுதிக்கு அருகே கடந்த வார இறுதியில் காணப்பட்ட மலைப்பாம்பு அகற்றப்பட்டுள்ளது.
அந்நிகழ்வு வழிப்போக்கர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது.
எண் 60 பாய லேபார் ரோட்டில் சனிக்கிழமையன்று (நவம்பர் 9) பாம்பு ஒன்று காணப்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததென தேசிய பூங்காக் கழகம் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 10) தெரிவித்தது. பாம்பு பாதுகாப்பாகக் பிடிக்கப்பட்டதாகவும் சோதனைக்காக அது மண்டாய் வனவிலங்குக் குழுமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாவும் தேசிய பூங்காக் கழகம் கூறியது.
தற்போது அந்த மலைப்பாம்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் கழகம் குறிப்பிட்டது. சோதனை முடிவுகளைப் பொறுத்து அது மனித நடமாட்டம் இல்லாத வனப் பகுதியில் விடப்படும் என்றும் கழகம் சொன்னது.
பாய லேபாரில் காண்ணப்பட்ட மலைப்பாம்பு, ‘ரெட்டிக்கியூலேட்டட் பைத்தன்’ (reticulated pythin) மலைப்பாம்பாகும். உலகின் ஆக நீளமான மலைப்பாம்பு வகையான அது, 6.25 மீட்டருக்கும் அதிக நீளத்துக்கு வளரக்கூடியது என்று பிரிட்டனின் இயற்கை வரலாற்று அரும்பொருளகத்தின் (Natural History Museum) தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 மீட்டர் நீளம்கொண்ட உலகின் ஆக நீளமான ‘ரெட்டிக்கியூலேட்டட் பைத்தன்’ மலைப்பாம்பு, 1912ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் கண்டறியப்பட்டது.