சிங்கப்பூர் ஊழியர்கள் அடுத்த ஆண்டு (2025) சராசரியாக இரண்டு முதல் ஐந்து விழுக்காட்டு ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
மனிதவள நிறுவனங்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளில் அது தெரியவந்தது.
அடுத்த ஆண்டுக்கான ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பில் நிறுவனங்கள் கவனமான அணுகுமுறையைக் கையாள்வதாக மனிதவளத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தென்கிழக்காசியாவில் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு ஒதுக்கப்படும் நிதி, சென்ற ஆண்டைவிடச் சற்று அதிகரிக்கும் என்று ஏயோன் (Aon) நிறுவனத்தின் அண்மைய அறிக்கை கூறியது. திறனாளர்களுக்கான தேவை இருப்பதை அது சுட்டியது.
ஏயோன் நிறுவனம் சிங்கப்பூரிலும் மேலும் ஐந்து தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள 950க்கு மேற்பட்ட நிறுவனங்களில் கருத்தாய்வு நடத்தியது.
சிங்கப்பூர் ஊழியர்கள் 4.4 விழுக்காட்டு ஊதிய உயர்வைப் பெறுவர் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் ஊழியர்களைவிட இது குறைவு.
இந்த வட்டாரத்தில் ஆக அதிகமாக, வியட்னாமிய ஊழியர்கள் 6.7 விழுக்காட்டு ஊதிய உயர்வைப் பெறுவர் என்று கூறப்படுகிறது.
இவ்வேளையில், சிங்கப்பூர் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு நான்கு விழுக்காட்டுச் சம்பள உயர்வை வழங்குமென்று எதிர்பார்க்கலாம் என்கிறது மெர்சர் நிறுவனம்.
தொடர்புடைய செய்திகள்
ராபர்ட் வால்ட்டர்ஸ் நிறுவனம், பணவீக்கத்தைக் கருத்தில்கொண்டு மதிப்பிடுகையில் அதே நிறுவனத்தில் வேலையில் நீடிக்கும் ஊழியர்கள் இரண்டு முதல் ஐந்து விழுக்காட்டு ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறது.
2025ல் சிங்கப்பூரின் வளர்ச்சி மெதுவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் ஊதிய உயர்வு குறித்த முன்னுரைப்புகள் வெளிவந்துள்ளன.
அடுத்த ஆண்டு நிச்சயமற்ற பொருளியல் சூழல் நிலவினாலும் அதிகமான போனஸ் தொகை வழங்கப்படும் என்று முன்னுரைத்துள்ளது மேன்பவர்குரூப் நிறுவனம்.
கூடுதலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு மேற்பட்ட சம்பளத் தொகையை போனசாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் எரிசக்தி, பயனீட்டுத் துறை ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஆக அதிக போனஸ் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.
உலகப் பொருளியல் சூழலில் நிச்சயமற்றதன்மை நிலவியபோதும், ஆண்டு முழுவதற்குமான ஊழியர்களின் முயற்சியை அங்கீகரிக்கும் விதமாகப் பல நிறுவனங்கள் அதிக போனஸ் தொகையை வழங்குவதாக அது கூறியது.