புதிய தனியார் வீடுகளின் விற்பனை ஜனவரியில் கூடியது

புதிய தனியார் வீடுகளின் விற்பனை ஜனவரியில் கூடியது

2 mins read
fe10396d-53c9-4e76-be0f-6431b8450987
ஜனவரியில் தனியார் வீடுகளின் விற்பனை கூடியதற்குச் சந்தையில் அறிமுகம் கண்ட மூன்று திட்டங்கள் முக்கியக் காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். - படம்: சிடிஎல்

புதிய தனியார் வீடுகளின் விற்பனை கடந்த மாதம் (ஜனவரி) அதற்கு முந்திய மாதத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்கிற்கும் மேல் கூடியுள்ளது.

எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகள் (EC) தவிர்த்து மொத்தம் 466 புதிய வீடுகள் ஜனவரியில் விற்பனையாயின. சென்ற ஆண்டு (2025) டிசம்பரில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 197ஆகவும் நவம்பரில் 325ஆகவும் இருந்தன. நகர மறுசீரமைப்பு ஆணையம் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) வெளியிட்ட அறிக்கையில் அந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.

எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்துப் பார்த்தால், ஜனவரியில் மொத்தம் 990 புதிய வீடுகள் விற்பனையாயின. போன டிசம்பரில் 234 வீடுகளும் நவம்பரில் 346 வீடுகள் விற்கப்பட்டன.

மூன்று புதிய திட்டங்களால் ஜனவரியில் விற்பனை கூடியதாக வல்லுநர்கள் கூறினர். பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள கோஸ்டல் கபானா, ஆன்சன் ரோட்டில் உள்ள நியூபோர்ட் ரெசிடென்ச‌ஸ், டெய்ரி ஃபார்ம் வாக்கில் உள்ள நாரா ரெசிடென்சஸ் ஆகியவையே அந்த மூன்று திட்டங்கள். அவற்றில் உள்ள 1,534 புதிய வீடுகள் கடந்த மாதம் சந்தையில் விற்பனைக்கு வந்தன.

“ஜனவரியில் புதிய வீடுகளின் விற்பனை மூன்று மாதத்தில் முதன்முறையாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இறுதியில் பரிவர்த்தனைகள் மெதுவடைந்தன. அதன் பிறகு சந்தையில் அறிமுகம் கண்ட மூன்று திட்டங்களால் வீடுகளை வாங்கும் ஆர்வம் கூடியுள்ளது,” என்றார் புரொப்நெக்ஸ் நிறுவனத்தின் ஆய்வு, உள்ளடக்கப் பிரிவுத் தலைவர் வோங் சியூ யிங்.

இருப்பினும் ஆண்டு அடிப்படையில் புதிய வீடுகளின் விற்பனை ஜனவரியில் 57 விழுக்காடு குறைந்ததாகத் திருவாட்டி வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்