விமான நிலையத்தில் முன்களச் சேவை வழங்கும் ‘சாட்ஸ்’ நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் சிலர் வேலை அனுமதி அட்டை விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்றுவரும் வேளையில், சாங்கி விமான நிலையத்தின் அன்றாடச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க ஊழியர்கள் சிலரை நிறுவனம் தற்காலிகமாகப் பணியிட மாற்றம் செய்துள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், ஊழியர்கள் சிலர் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுள்ளதாகவும், சிலர் தற்காலிகமாக வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்யக் கண்காணிப்புக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
தீபாவளி நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், செயல்பாட்டுப் பிரிவில் இல்லாத ஊழியர்களும் உடமைகளைக் கையாளும் பணிகளில் தாமாக முன்வந்து உதவ ஊக்குவிக்கப்படுகின்றனர். கூடுதலாக இரண்டரை மணி நேரப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு $15 மதிப்புள்ள என்டியுசி பற்றுச்சீட்டுகள், மாற்று விடுப்பு, போக்குவரத்துச் செலவு ஆகியவை வழங்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மனிதவள அமைச்சு திங்கட்கிழமை (நவம்பர் 2) வெளியிட்ட அறிக்கையில், சாட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்கள்மூலம் பணியமர்த்தப்பட்ட கிட்டத்தட்ட 270 ஊழியர்கள் வேலை அனுமதி அட்டை விதிகளுக்குப் புறம்பாகப் பணியமர்த்தப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மேல்நிலை வேலை அனுமதி பெற்ற சிலர் உடமைகளைக் கையாளும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
விமான நிலையச் சேவைகளில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க சாட்ஸ் நிர்வாகத்துடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் (சிஏஜி) தெரிவித்தது. ஒப்பந்த நிறுவனங்கள் மனிதவளச் சட்டங்களை முழுமையாகப் பின்பற்றுவதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலை வணிகத்தில், சாட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 3.01 விழுக்காடு சரிந்தது. காலை மணி 10.40 நிலவரப்படி, கிட்டத்தட்ட $14.2 மில்லியன் மதிப்புள்ள 400,000 பங்குகள் கைமாறின.
