இந்த வட்டாரத்தை இனி பெரிய அளவிலான நிலநடுக்கம் அல்லது சூறாவளி தாக்கினால், நிவாரண உதவிகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அவசரநிலை மருத்துவக் குழுவை சிங்கப்பூர் 72 மணி நேரத்தில் பணியில் அமர்த்த முடியும்.
சிங்கப்பூரின் மனிதாபிமான, பேரிடர் சமாளிப்புத் திறன்களை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கை அது.
பணியில் அமர்த்தப்படும்போது முழுமையாக, சுயசார்புடையதாக குழு இருக்கவேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை மருத்துவக் குழுத் திட்டத்தின்கீழ் சான்றுபெறுவதற்கான ஒரு முக்கிய அம்சமாகும்.
அப்படி என்றால், அவசரநிலை மருத்துவக் குழு தனது சொந்த மின்சாரம், தூய்மையான தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். தனது மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணிகளைக் கவனித்துக்கொள்வதோடு, தனது பணியாளர்களுக்குத் தங்குமிட வசதிகளையும் அது வழங்கவேண்டும்.
“பேரிடருக்குப் பிறகு உயிர்களைக் காப்பற்றுவதற்கென மிகக் குறைந்த நேரம் மட்டுமே இருப்பதால், சுயசெயல்பாடு மிக முக்கியம்,” என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை செயல்பாடுகளுக்கான திட்டப் பகுதி மேலாளர் ஷான் கேசி கூறினார்.
சிங்கப்பூர் அவசரநிலை மருத்துவக் குழுவின் தொடக்க நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் பேசினார்.
சிங்கப்பூர் 18 மாதங்களில் அந்தக் குழுவை அமைத்ததாக அவர் சொன்னார். மற்ற நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் அதற்கான செயல்முறையை நிறைவுசெய்ய சில ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.
“இருப்பினும், சிங்கப்பூரில் நாம் கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டோம்,” என்றார் திரு ஓங்.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் ஒட்டுமொத்த அரசாங்க அணுகுமுறையை உருவாக்கி, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுடன் அணுக்கமாகச் செயல்பட்டோம். சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த, அவற்றுடன் இணைந்து செயல்பட்டோம்.
“அதோடு, சிங்கப்பூரின் அவசரநிலை மருத்துவக் குழுவின் உலகச் செயல்பாட்டு ஆற்றல்களை வலுப்படுத்த, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சுடனும் பணியாற்றினோம்,” என்று திரு ஓங் கூறினார்.
மேற்கு பசிபிக் வட்டாரத்தில், உலகச் சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அவசரநிலை மருத்துவக் குழுவை அமைத்திருக்கும் 13வது நாடு சிங்கப்பூர்.
கடந்த 2012ஆம் ஆண்டுமுதல், உலகின் பேரிடர்களில் ஏறக்குறைய 15% ஆசியானைத் தாக்கியுள்ளன. அதே காலகட்டத்தில், பில்லியன்கணக்கானோரின் உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 17 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது.
முன்னதாக 2018ஆம் ஆண்டில் நேர்ந்த சுலவேசி நிலநடுக்கம், 2015ஆம் ஆண்டில் நேர்ந்த நேப்பாள நிலநடுக்கம், 2012ஆம் ஆண்டில் பிலிப்பீன்சை உலுக்கிய ‘ஹையான்’ சூறாவளி ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் அதன் பேரிடர் நிவாரணக் குழுக்களைப் பணியில் அமர்த்தியது.
“சிங்கப்பூர் அவசரநிலை மருத்துவக் குழுவின் தொடக்க நிகழ்ச்சி, வட்டாரப் பேரிடர் சமாளிப்புத் திறன்களை வலுப்படுத்த சிங்கப்பூரின் கடப்பாட்டை வலியுறுத்துகிறது,” என்று திரு ஓங் கூறினார்.
இந்தக் குழு உள்ளூரிலும் பணியமர்த்தப்படலாம் என்றார் அவர்.

