பொரித்த கோழியைப் பயணி ஒருவர் பேருந்தில் கொண்டு சென்றதற்காக ஓட்டுநரிடமிருந்து திட்டு வாங்கினார்.
இச்சம்பவம் ஏப்ரல் 27ஆம் தேதி இரவு எட்டு மணியளவில் 293 பேருந்துச் சேவையில் நடந்ததாக ‘ஸ்டோம்ப்’ தெரிவித்துள்ளது.
“பொரித்த கோழி ஒரு பொட்டலப் பெட்டியில் இருந்தது. அது நெகிழிப் பையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நன்கு மூடப்பட்ட ‘ஸிப்’ பையில் மட்டுமே கோழியை வைத்திருக்க முடியும் என்று எஸ்பிஎஸ் பேருந்து ஓட்டுநர் கூறினார்,” என்றார் அந்தப் பயணி.
பொதுப் பேருந்தில் சாப்பிடவோ பானம் அருந்தவோ கூடாது என்பது பயணிகள் அறிந்ததே.
இருப்பினும், உணவை இவ்வாறு கொண்டுசெல்வது அனுமதிக்கப்படாது என்ற விதிமுறையை அப்போதுதான் கேள்விப்பட்டதாக அந்தப் பயணி தெரிவித்தார்.
அதே பேருந்தில் இருந்த மற்றொரு பயணி, ‘ஆர்னல்டு’ஸ் பொரித்த கோழி’யை வைத்திருந்ததற்காக ஓட்டுநரிடம் திட்டு வாங்கினார்.
“எங்களை ஓட்டுநர் பயமுறுத்தினார். பேருந்தைவிட்டு இறங்குமாறு சொல்லிக்கொண்டே இருந்தார். நாங்கள் வைத்திருந்த உணவிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அவரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்,” என்றார் பாதிக்கப்பட்ட பயணி.
இதுகுறித்து தெளிவுபெறுவதற்காக அந்தப் பயணி, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துடன் தொடர்புகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
பதிலுக்கு நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில், பயணியிடம் மன்னிப்பு கோரியதுடன் அவருக்கு நேர்ந்த அனுபவம் குறித்து அதன் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டது.
அதையடுத்து, சம்பவம் தொடர்பாக நிறுவனம் விசாரணை மேற்கொண்டதுடன் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரை அடையாளங்காணவும் முனைந்தது.

