மாற்றுத்திறனாளிப் பயணிகளுக்கு உதவ 70% ஊழியர்களுக்குப் பயிற்சி: எஸ்பிஎஸ் டிரான்சிட் இலக்கு

மாற்றுத்திறனாளிப் பயணிகளுக்கு உதவ 70% ஊழியர்களுக்குப் பயிற்சி: எஸ்பிஎஸ் டிரான்சிட் இலக்கு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Oct 2026 - 10:15 pm

2 mins read

பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட், மாற்றுத்திறனாளிப் பயணிகளுக்குச் சிறந்த சேவையாற்றுவதற்காக 2030ஆம் ஆண்டுக்குள் தனது முன்னணி ஊழியர்களில் 70 விழுக்காட்டினருக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போது அதன் முன்னணி ஊழியர்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் பயிற்சி பெற்றுள்ளனர் என்று அதன் குழுமத் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி சிம் தெரிவித்தார். செப்டம்பர் மாத இறுதியில், இந்நிறுவனத்தில் ஏறக்குறைய 6,500 முன்னணி ஊழியர்கள் பணியாற்றினர்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்திற்கும் ‘எஸ்ஜி எனேபல்’ மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக இந்த இலக்கு உள்ளது.

வெளிப்படையாகத் தெரியாத குறைபாடுகள் உள்ளவர்கள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுப் போக்குவரத்தை அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவது நோக்கம்.

மனிதவள மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் முன்னிலையில், வியாழக்கிழமை (அக்டோபர் 29) தாமான் ஜூரோங் சமூக மன்றத்தில் இவ்விரு அமைப்புகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பயண அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி, எஸ்பிஎஸ் டிரான்சிட் மற்றும் அதன் கட்டமைப்பு முழுவதிலும் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் எண்ணிக்கையைத் தற்போதுள்ள கிட்டத்தட்ட 50லிருந்து 2030ஆம் ஆண்டுக்குள் 300ஆக உயர்த்துவதையும் இந்தப் பங்காளித்துவம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிலைய வழிகாட்டிகள், வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், மனிதவள அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் போன்ற பொறுப்புகளில் இந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

தளவாடங்கள் மற்றும் சேவைக் கட்டுப்பாடு போன்ற துறைகளிலும் மற்ற ஆதரவுப் பணிகளிலும் கூடுதல் வாய்ப்புகளை ஆராயவுள்ளதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது; வேலைகளை மறுவடிவமைத்தல், பணியிட வசதிகளைச் செய்துகொடுத்தல், வேலைப் பயிற்றுவிப்பாளர்களின் ஆதரவை வழங்குதல் ஆகியவை இவற்றில் அடங்கும்.

மாற்றுத்திறனாளிப் பயணிகளுக்கு ஆதரவளிப்பதற்கு ஏதுவாக, ஊழியர்களைச் சிறந்த முறையில் தயார்ப்படுத்த இந்நிறுவனம் கூடுதல் செய்முறைப் பயிற்சிகளை அறிமுகப்படுத்தும்.

தொழில்நுட்பக் கல்வி நிறுவன மாணவர்களுக்காக 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நீட்டிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்