தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏப்ரல் 8 மியன்மாரிலிருந்து திரும்பும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

1 mins read
c5b4a486-203b-4f50-8e15-8bd96ce0240a
மியன்மாரில் தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட குடிமைத் தற்காப்புப் படையினர். - படம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை

மியன்மாரை மோசமான நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து தேடல், மீட்புப் பணிகளில் கைகொடுக்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ‘ஆப்ரே‌ஷன் லயன்ஹார்ட்’ குழுவினர் அந்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அந்த 80 பேர் கொண்ட குழு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நாடு திரும்பும் என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை திங்கட்கிழமை (ஏப்ரல் 7) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. சுமார் 10 நாள்கள் நீடித்த தேடல், மீட்புப் பணிகளுக்குப் பிறகு அக்குழு சிங்கப்பூர் திரும்பவுள்ளது.

மியன்மாருக்கு அனுப்பப்பட்ட சிங்கப்பூர் குழுவின் தலைவரான கர்னல் டே ‌ஷி வெய், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் சார்பில் மியன்மார் தீயணைப்புப் படையின் தலைமை இயக்குநருக்கு ‘ஹைட்ராலிக் கட்டர்’ (hydraulic cutter) கருவியை அன்பளிப்பாக வழங்கினார்.

கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதியன்று நிலநடுக்கத்தால் பாதி இடிந்து விழுந்த மூன்று மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆடவரை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டனர். அந்த மீட்பு நடவடிக்கையில் ‘ஹைட்ராலிக் கட்டர்’ கருவி மிக முக்கியமானதாக அமைந்தது.

லயன்ஹார்ட் படை, நேப்பிடோ பெண்கள் மருத்துவமனைக்கு இரண்டு கூடாரங்களையும் தானமாக வழங்கியது; நேப்பிடோ பொது மருத்துவமனைக்கு ஐந்து கூடாரங்கள், மருந்து உள்ளிட்ட பொருள்களையும் தானமாக வழங்கியது.

குறிப்புச் சொற்கள்