சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் வெளிநாட்டுப் பேரிடர் உதவிக் குழுவுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆக உயரிய அனைத்துலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
அனைத்துலகத் தேடுதல் மீட்பு ஆலோசனைக் குழுமத்தின் (INSARAG) பாவனைப் பயிற்சியின்கீழ் நகர்ப்புறத் தேடுதல், மீட்புக் குழுக்கள் மூன்று நிலைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. மிதமானது, நடுத்தரமானது, கடுமையானது என்பன அந்த மூன்று நிலைகள்.
36 மணி நேரம் நீடித்த மீட்புப் பயிற்சியைத் தொடர்ந்து, குடிமைத் தற்காப்புப் படை கடுமையான நிலையின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைப் பயிற்சி ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்றது.
இடிந்துவிழுந்த சுவர்ப் பகுதியிலிருந்து காயமுற்ற ஒருவரைக் குடிமைத் தற்காப்புப் படையின் ‘ஆப்பரேஷன் லயன்ஹார்ட்’ குழுவினர் மீட்கவேண்டியிருந்தது.
மண்டாயில் உள்ள உள்துறைக் குழுவின் உத்திபூர்வ நிலையத்தில் பயிற்சி இடம்பெற்றது. ஆலோசனைக் குழுமத்தின் 13 வல்லுநர்கள் அதனை மதிப்பிட்டனர். அவர்கள் ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியா, பிரேசில், ஹாங்காங், கத்தார், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் பயிற்சியைப் பார்வையிட்டனர்.
தேடுதல், மீட்புப் பணியின்போது பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்திய திறன்கள், மருத்துவ ஆற்றல்கள், தளவாட நிர்வாகம் முதலியவற்றை வல்லுநர்கள் கவனத்தில் கொண்டதாக உத்திபூர்வ நிலையத்தின் பயிற்சி, நிபுணத்துவ மேம்பாட்டுப் பிரிவு இயக்குநரும் உதவி ஆணையருமான திரு சூ கெங் டோக் தெரிவித்தார்.
மீட்புப் பணியில் ஈடுபட்டோர், ஓரடி தடிமன் கொண்ட கான்கிரீட் சுவரில் இயந்திரக் கருவியைக் கொண்டு துளையிட்டனர். அதிகச் சத்தம், தூசு, உலோக முறுக்குக் கம்பிகள் முதலியவற்றால் பணி மிகவும் சவாலாக இருந்தது.
இடிபாடுகளுக்கு இடையே எவரேனும் உயிருடன் இருக்கின்றாரா என்பதைக் கண்டறிய மோப்ப நாய்களையும் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தினர். கான்கிரீட் பலகையின்கீழ் சிக்கியிருந்த ‘காயமுற்ற ஒருவரைக்’ குழுவினர் மீட்டதைப் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் வல்லுநர் ஒருவரும் அருகிலிருந்து பார்வையிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வெற்றிபெற்ற குடிமைத் தற்காப்புப் படையின் வெளிநாட்டுப் பேரிடர் உதவிக் குழுவைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பெருமைமிகு ‘இன்சராக்’ ஒட்டுவில்லையைப் பெற்றனர்.