சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி மே 16ஆம் தேதி பணியில் இருந்தபோது உயிரிழந்தார்.
சிங்கப்பூரின் தென் மேற்குப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து தனக்கு நள்ளிரவு 12.15 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
வெஸ்ட் கோஸ்ட் தீயணைப்பு நிலையத்தின் அதிகாரிகள் அங்குச் சென்றடைந்ததும் இயந்திர அறையிலிருந்து புகை வருவதைக் கண்டனர்.
முழு நேர அதிகாரி ஒருவரும், மற்றொரு தீயணைப்பாளரும் இணைந்து தீயை அணைப்பதற்காக இயந்திர அறையினுள் சென்றனர்.
“தீயணைக்கும் பணியின்போது, அந்த அதிகாரி மாடிப்படியின் அடியில் படுத்துக் கிடந்திருந்ததை மற்றொரு தீயணைப்புக் குழு கண்டது,” என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அவர் சுயநினைவுடன் இருந்தாலும் உடல் நலமில்லாமல் இருந்தது போல் தெரிந்ததாக அது சொன்னது. அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் சுயநினைவை இழந்ததாகவும், பாசிர் பாஞ்சாங் படகு முனையத்திற்குக் கொண்டு செல்லப்படுவதற்குமுன் அவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவர் பிறகு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
காலை 5.50 மணிவாக்கில் அவர் மருத்துவமனையைச் சென்றடைந்தார். அங்கு அவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டது.
“சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நமது அதிகாரியின் மரணம் குறித்து ஆழ்ந்த சோகத்தில் உள்ளது. அவரின் குடும்பத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகிறோம்,” என்று அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
விசாரணை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

