ஒழுங்கைப் பேண சீருடை அதிகாரிகளை நாடும் பள்ளிகள்

ஒழுங்கைப் பேண சீருடை அதிகாரிகளை நாடும் பள்ளிகள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

01 Nov 2026 - 3:55 pm

2 mins read

சிங்கப்பூரில் ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக, மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த நிர்வாகத்திலும் பணிகளிலும் உதவ பள்ளிக்கூடங்கள் கல்வியமைச்சு சாராத அதிகாரிகளைப் பணியமர்த்தி வருகின்றன.

அத்தகைய அதிகாரிகள், உண்மை நிலவரத்தைக் கண்டறிதல், சண்டைச் சச்சரவுகளைத் தீர்த்துவைத்தல், அறிக்கைகளைத் தயாரித்தல், பெற்றோருடன் தொடர்புகொள்ளுதல் போன்ற பணிகளுக்காகத் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் ஒழுங்குமுறை ஆதரவு அதிகாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். வேறுசிலர் ஒழுங்குமுறை உதவியாளர்கள், ஒழுங்குமுறை, விசாரணை உதவியாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆயுதப் படை, காவல்துறை, சிறைத்துறை போன்ற சீருடைப் பிரிவுகளில் பணிபுரிந்த அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களைப் பணியமர்த்த பெரும்பாலான பள்ளிகள் விரும்புகின்றன.

முழுநேர அடிப்படையில் குறைந்தது ஓராண்டுக்கு அந்த அதிகாரிகள் வேலை செய்யும்படி பெரும்பாலான பள்ளிகள் கோருகின்றன. கூடுதலாக ஓராண்டுக்கு அந்தப் பணிக்காலத்தை நீட்டிக்கும்படியான கோரிக்கையையும் அவை முன்வைக்கின்றன.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பள்ளிகளில் இடம்பெறும் பகடிவதை குறித்த மறுஆய்வு அறிவிக்கப்பட்டது. அதில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப சீருடைப் பிரிவில் இருந்தோரைப் பணியமர்த்தும் நடவடிக்கைக்குக் கல்வியமைச்சு நிதியாதரவு வழங்குகிறது.

பள்ளிகள் அவற்றின் தேவைக்கேற்ப, பணியமர்த்த விரும்பும் அதிகாரிகளுக்கு என்னென்ன தகுதிகளும் திறன்களும் இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளலாம் என்று கல்வியமைச்சு பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டார்.

அவை, ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இளைய ஊழியர்கள், மாணவர்நலப் பராமரிப்பு அதிகாரிகள் அல்லது பெற்றோர் தொடர்பு அதிகாரிகள் போன்றோரைப் பணியமர்த்தலாம்.

அதன்மூலம், சிக்கல் நிறைந்த விவகாரங்களிலும் கூடுதலான ஆதரவு தேவைப்படும் மாணவர்களின்மீதும் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் செலவிட வாய்ப்புக் கிடைக்கும் என்று கல்வியமைச்சின் பேச்சாளர் சொன்னார்.

இவ்வாண்டின் பிற்பாதியில் குறைந்தது 20 பள்ளிக்கூடங்கள் கல்வியமைச்சு சாராத அதிகாரிகளைப் பணியமர்த்த முற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்