புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் மீண்டும் பால் தம்பையா போட்டி

2 mins read
711874d8-1e85-43cd-b64f-20c4b8628719
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் பால் தம்பையா, புதன்கிழமை (ஏப்ரல் 23) வேட்புமனுத் தாக்கல் நிலையங்களில் ஒன்றான மெத்தடிஸ் பெண்கள் பள்ளியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின்னர் அங்குக் கூடியிருந்த ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தனித்தொகுதிகளில் ஒன்றான புக்கிட் பாஞ்சாங்கில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) லியாங் எங் ஹுவாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர், பேராசிரியர் பால் ஆனந்தராஜா தம்பையா.

2020ல் அத்தொகுதியில் 46.26% வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் புதன்கிழமை (ஏப்ரல் 23) செய்தியாளர்களிடம் பேசிய அவர், புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள 150 புளோக்குகளில் 135 புளோக்குகளில் குடியிருப்பாளர்களைச் சந்தித்து உள்ளதாகக் கூறினார். அத்தொகுதியில் கணிசமான அளவு சமூகக் கலந்துரையாடல்களில் பங்கேற்றதாகவும் அதனால் அதிகமான குடியிருப்பாளர்கள் தங்களை அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் பாஞ்சாங்கிலும் செம்பவாங் குழுத் தொகுதியிலும் குறிப்பாகச் செம்பவாங் வெஸ்ட் தனித் தொகுதியிலும் பலத்த போட்டியை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். அத்தொகுதியில் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் போட்டியிடுகிறார்.

புக்கிட் பஞ்சாங்கில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் திரு தம்பையா 2020ஆம் ஆண்டு தேர்தலில் கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக நேரடிப் பிரசாரத்தில் ஈடுபட முடியாததை ஈடுகட்டும் வகையில் இம்முறை நேரடிப் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.

முன்னதாக, புளோக் 419 ஃபாஜார் ரோட்டில் தொகுதி உலாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு தம்பையா, “நேரில் பேசும்போது, அக்கூட்டத்திற்குப் பிறகும் மக்கள் வேட்பாளர்களை அணுகலாம். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்,” என்று கூறினார்.

எதிர்க்கட்சிக்கு நன்கொடை அளிக்கத் தயங்குபவர்கள் பிரசாரக் கூட்டத்தின்போது கட்சிச் சின்னம் பொறிக்கப்பட்ட பொருள்களை வாங்குவது போன்ற இதர வழிகளில் ஆதரவளிக்கலாம் என்றும் திரு தம்பையா கூறினார்.

குறிப்புச் சொற்கள்