சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடுவதோடு தனிநபர் நடமாட்டச் சாதனமாகவும் செயல்படும் இயந்திரம் சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் சோதிக்கப்படுகிறது.
கிப்சன் (Gibson) என்று அழைக்கப்படும் அந்தத் தானியக்க இயந்திரம், வழியில் வரும் தடைகளையும் மக்களையும் தவிர்க்க பல கேமராக்களையும் உணர்கருவிகளையும் கொண்டு செயல்படுகிறது.
விமான நிலையத்தில் நீண்டதூரம் செல்ல வேண்டும் என்றால் அதிகாரிகள் அந்த இயந்திரத்தைத் தனிநபர் நடமாட்டச் சாதனமாகவும் பயன்படுத்தலாம்.
ஹெச்டிஎக்ஸ் (HTX) எனும் உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு, ஏ ஸ்டார் தகவல் தொடர்பு ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து கிப்சனை உருவாக்கியது. அந்த இயந்திரத்தைச் சோதிக்கும் பணி இம்மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்தது.
“அதிகாரிகளுக்கு ஒரு துணை இயந்திரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோன்றியது கிப்சன்,” என்றார் ஹெச்டிஎக்ஸ் அமைப்பின் பொறியாளர் சியா சி.
சீருடைப் பிரிவில் மனித இயந்திரக் கருவிகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும் கிப்சன் உருவாக்கப்பட்டதாகத் திரு சியா கூறினார்.
அதை நடமாட்ட சாதனமாகவும் பயன்படுத்தும் அம்சம் சீருடைப் பிரிவில் தயாரிக்கப்பட்டது.
தொலைபேசிகளையும் டேப்லட்டையும் பயன்படுத்தி அருகில் உள்ள இடத்திற்கு இயந்திரத்தை அதிகாரிகளால் கொண்டுவர முடியும்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பிட ஓர் இடத்துக்கு கிப்சன் மூலம் பயணம் செய்யும் அதிகாரிகள் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை அதில் பதிவுசெய்துவிட்டு சம்பவம் தொடர்பான இதர விவரங்களில் கவனம் செலுத்த முடியும்.
பேட்டரிகளில் ஓடும் ஒவ்வோர் இயந்திரமும் நான்கு மணி நேரம் வரை செயல்பட முடியும். கிப்சனின் பாதையில் வேண்டுமென்றே யாரெனும் வந்தால் உடனே அது எச்சரிக்கை ஒலியை எழுப்பும்.
1900களின் தொடக்கத்தில் முதல் மோட்டார் ஸ்கூட்டரை உருவாக்கிய ஆர்த்தர் ஹியுகோ செசில் கிப்சன் என்பவரின் பெயரைக் கொண்ட இயந்திரம், விமான நிலையத்தில் சுற்றுக்காவலில் பயன்படுத்தப்படும் இரண்டாவது இயந்திரம்.
முதல் சுற்றுக்காவல் இயந்திரங்கள் ஏப்ரல் 2023இல் அறிமுகம் கண்டன. கிட்டத்தட்ட ஐந்தாண்டுக்கு மேற்பட்ட சோதனைகளுக்குப் பிறகு கட்டம் கட்டமாக அவை விமான நிலையத்தில் செயல்படுத்தப்பட்டன.