இரண்டு நாள்களில் மலேசியர் தொடர்புடைய இரண்டாவது மோசடிச் சம்பவம்

இரண்டு நாள்களில் மலேசியர் தொடர்புடைய இரண்டாவது மோசடிச் சம்பவம்

2 mins read
b27ad256-4c97-4453-a8b6-43dfdcb0f420
மோசடிக் கும்பலுக்காக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதை மலேசியா ஆடவர் ஒத்துக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 38 வயது மலேசிய ஆடவர்மீது நீதிமன்றத்தில் சனிக்கிழமை (மார்ச் 7) குற்றஞ்சாட்டப்பட்டது.

மோசடிக் கும்பலின் சார்பாக பாதிக்கப்பட்டோரிடமிருந்து ரொக்கத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிய குற்றச்சாட்டை ஆடவர் எதிர்கொள்கிறார்.

சிங்கப்பூரில் இரண்டு நாள்களுக்குள் இரண்டாவது முறையாக இத்தகைய சம்பவம் நேர்ந்துள்ளது.

எச்எஸ்பிசி வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி முன்பின் தெரியாத ஒருவர் தொலைபேசியில் அழைத்தது தொடர்பில் மார்ச் 4ஆம் தேதி காவல்துறைக்குப் பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கடன் அட்டையிலிருந்து அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாகத் தொலைபேசியில் உரையாடியவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் தம்மிடம் எச்எஸ்பிசி வங்கியில் கடன் அட்டை இல்லை என்று கூறியதை அடுத்து, வர்த்தக விவகாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் பெண்ணிடம் பேசியுள்ளார்.

அந்த ஆடவர், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் மோசடியில் பெண் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்றார்.

அதையடுத்து பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட $15,000 ரொக்கத்தை அவர் எடுத்து மேக்சி-கே‌ஷ் அடகுக் கடையிலிருந்து தங்க நகைகளை வாங்கும்படி கூறப்பட்டது. மேலும், அந்தப் பெண் $130,000 மதிப்புள்ள தங்கத்தை வாங்கி அதை அப்பர் பூன் கெங் ரோட்டில் உள்ள தமது காரின் இருக்கையில் வைக்கும்படியும் கூறப்பட்டது.

மோசடிக்காரர்கள் சொன்னதை எல்லாம் செய்த பெண் பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகள் சந்தேகப் பேர்வழியை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.

மோசடிக் கும்பல் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆடவர் மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆடவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரை சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடிசிங்கப்பூர்ஆள்மாறாட்டம்