சிங்கப்பூரின் ஆகப் பெரிய பணமோசடி வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் 42 வயது ஆடவர்மேல் ஜனவரி 23ஆம் தேதி, 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
போலியான கையெழுத்திட்டது தொடர்பான குற்றச்சாட்டும் அவற்றில் அடங்கும்.
வாங் ஜுன்ஜி தனது தாயகக் குடியுரிமையைத் துறந்து சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்.
முன்னதாக, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் வெளிநாட்டவர் பத்துப் பேர் தண்டிக்கப்பட்டனர். அவர்களில் இருவருக்குத் தொடர்புடைய பல்வேறு குற்றச்செயல்களில் வாங் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பத்துக் குற்றவாளிகளில் ஒருவரான சு பாவ்லின், 2021ஆம் ஆண்டு அக்டோபரில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்கு வருமானம் குறித்துத் தவறான தகவல்களைச் சமர்ப்பிப்பதற்கு வாங் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில், மற்றொரு குற்றவாளியான சு ஹய்ஜின் டிபிஎஸ் வங்கியை ஏமாற்றுவதற்குப் போலியான கையெழுத்திட்ட ஆவணத்தைத் தயாரிக்கும் சதித்திட்டத்திலும் வாங் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தெரிந்தே தவறான தகவல்களைக் கூறியது, போலியாகக் கையெழுத்திட்ட ஆவணங்களைப் பயன்படுத்தியது ஆகியவை தொடர்பில் மேலும் 13 குற்றச்சாட்டுகள் வாங் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது சிங்கப்பூரர் இவர்.
தொடர்புடைய செய்திகள்
வாங், 185 நிறுவனங்களின் இயக்குநர் அல்லது நிறுவனச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2023ல் தகவல் வெளியிட்டிருந்தது. அவற்றில் சில நிறுவனங்கள், சு ஹய்ஜின், சு பாவ்லின் இருவருடனும் தொடர்புடையவை.
சு ஹய்ஜினிடம் சைப்ரஸ், சீனா, கம்போடியா ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் இருந்தன. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி அவருக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரிடமிருந்து $165 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கடந்த மே 28ஆம் தேதி அவர் கம்போடியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
சு பாவ்லின் கைது செய்யப்பட்டபோது அவரிடம் சீனா, கம்போடியா, வனுவாட்டு ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் இருந்தன. கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அவருக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏறத்தாழ $65 மில்லியன் மதிப்பிலான அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மே 25ஆம் தேதி அவர் கம்போடியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
அந்த இருவருடனும் தொடர்புடையதாகக் கூறப்படும் வாங், ஜனவரி 23ஆம் தேதி, $50,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு மார்ச் 6ஆம் தேதி விசாரணைக்கு வரும்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய பணமோசடி வழக்கில் குற்றவாளிகளான வெளிநாட்டவர் பத்துப் பேருக்கும் 13 முதல் 17 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் நாடுகடத்தப்பட்டதுடன் சிறையிலிருந்து வெளியேறிய பிறகு சிங்கப்பூருக்கு வருவதற்குத் தடையும் விதிக்கப்பட்டது.
அந்த வழக்கின் தொடர்பில் சென்ற ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம், லியூ யிக் கிட் எனும் 42 வயது சிங்கப்பூர் ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

