செம்பவாங் நார்த் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 775 விருப்பத்துக்கேற்ப கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்.
இவை, அவ்வட்டாரத்தில் வெளியிடப்படும் முதல் பிடிஓ வீடுகளாகும். நீக்குப்போக்கான குத்தகையுடன் வரும் ஈரறை வீடுகள், நான்கறை மற்றும் ஐந்தறை வீடுகள், மூன்று தலைமுறையினர் வீடுகள் ஆகியவை செம்பவாங் பீக்கன் திட்டத்தின்கீழ் விற்பனைக்கு விடப்படும். இந்த வீடுகளுக்குள் குடிபோக மூவாண்டுகள் காத்திருக்கவேண்டும் என்று வீவக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) தெரிவித்தது.
இந்த பிடிஓ திட்டம் அட்மிரல்டி லிங்க், அட்மிரல்டி லேன், கேன்பெரா ரோடு ஆகியவை இருக்கும் பகுதியில் அமைந்துள்ளது. அக்கம்பக்கத்து பூங்கா, செம்பவாங் பெருவிரைவு ரயில் நிலையம், பேரங்காடி மற்றும் காப்பிக்கடை உள்ளிட்ட கடைகள் இருக்கும் செம்பவாங் மார்ட் ஆகியவற்றுக்கு அருகில் இத்திட்டம் அமைந்துள்ளது.
செம்பவாங் பீக்கனின் வடிவம், அவ்வட்டாரத்தின் கடல்துறை வரலாற்றை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது என்று வீவக தெரிவித்தது. சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள செம்பவாங் நார்த்தில் 1920களில் பிரிட்டிஷ் கடற்படைத் தளம் அமைந்திருந்தது. அப்போது கடற்படை அதிகாரிகள் கறுப்பு-வெள்ளை வீடுகளில் வசிப்பர்.
செம்பவாங் பீக்கன் புளோக்குகளின் வெளிப்புறம் கறுப்பு நிற வடிவங்களைக் கொண்டிருக்கும். அந்தகாலத்துக் காலனித்துவ வீடுகளை நினைவூட்டும் வகையில் அவை அமைந்திருக்கும் என்று வீவக குறிப்பிட்டது. அங்கு கட்டப்பட்டுவரும் விளையாட்டுத் திடலில் கடல் சம்பந்தப்பட்ட வடிவமைப்புகள் இருக்கும்.
கூரை மேல் உள்ள பூங்கா, வெளிப்புறப் பகுதி போன்ற பசுமைப் பகுதிகளும் திட்டத்தில் இடம்பெறும். சிங்கப்பூருக்கான துடிப்பை வெளிப்படுத்தும் வரலாற்று, கலாசார சிறப்புமிக்க செடிகளும் பொது இடங்களில் நடப்படும் என்று வீவக கூறியது. செம்பவாங் மரம் என்றழைக்கப்படும் மரமும் அவற்றில் அடங்கும்.
அக்கம்பக்கத்து நிலையம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடலுறுதி நிலையங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரு ஹெக்டர் பரப்பளவுகொண்ட பூங்கா, சைக்கிளோட்டப் பாதைகள், நடைபாதைகள் ஆகியவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீவக தெரிவித்தது.
செம்பவாங் நார்த் வட்டாரம், 53 ஹெக்டர் பரப்பளவில் அமைந்திருக்கும். வட்டாரம் அமைக்கப்பட்டு முடிந்தவுடன் அங்கு 8,000 பிடிஓ வீடுகள், 2,000 தனியார் வீடுகள் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
முக்கியமான போக்குவரத்து மையங்களுக்கு அருகில் இல்லாததால் செம்பவாங் பிடிஓ திட்டம், ஸ்டாண்டர்ட் கேட்டிகரி எனப்படும் சாதாரணப் பிரிவில் சேர்க்கப்படும் என்று கவனிப்பாளர்கள் முன்னதாகக் கூறியிருந்தனர். அப்பிரிவின்கீழ் வரும் வீடுகளுக்கான குறைந்தபட்ச குடியிருப்புக் காலகட்டம் ஐந்தாண்டுகளாகும். பெரும்பாலான வீவக வீடுகள் ஐந்தாண்டு குறைந்தபட்ச குடியிருப்புக் காலகட்டத்தைக் கொண்டுள்ளன.