புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகளைத் தேடும் முயற்சியின் ஒரு பகுதியாக, அணுசக்தித் துறையில் சாத்தியக்கூறுகளை ஆராயவும் தொழில்துறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரு முக்கியப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
செம்ப்கார்ப் நிறுவனத்தின் கிளை நிறுவனமான செம்ப்கார்ப் யுட்டிலிட்டிஸ், சிங்கப்பூரின் ‘எஸ்டி என்ஜினியரிங்’ கனடாவின் ‘அட்கின்ஸ்ரியலிஸ்’ ஆகிய பொறியியல் நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) அறிவித்தது.
நாடுகள் நீண்டகால எரிசக்தி ஆதாரங்களை ஆராய்ந்து வரும் வேளையில் அணுசக்தியும் ஒரு சாத்தியமான வழியாகக் கருதப்படுவதாக செம்ப்கார்ப் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சார்லஸ் கோ தெரிவித்தார்.
இந்தப் பங்காளித்துவங்கள் மூலம் அணுசக்தித் தொழில்நுட்பங்கள், அவற்றின் பயன்பாடுகள், பாதுகாப்பு விதிகள் குறித்த அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ள முடியும் என்றார் அவர்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அணுசக்தித் தொழில்நுட்ப அனுபவம்கொண்ட கனடாவின் அட்கின்ஸ்ரியலிஸ் நிறுவனத்துடன் தொழில்நுட்பம், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்டி என்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப விநியோகக் கட்டமைப்பு, அனைத்துலக நடைமுறைகள், திறமையாளர்களை உருவாக்குதல் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படும்.
“வரவிருக்கும் ஹைட்ரஜன் மின் உற்பத்தி நிலையம் போன்ற குறுகிய காலத் தீர்வுகளுடன், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பிற்கும் மாற்றத்திற்கும் நாங்கள் ஆதரவளிப்பதுடன், எதிர்கால வாய்ப்புகளுக்கு ஏற்ப எங்கள் எரிசக்தி வணிகத்தை ஆயத்தப்படுத்தி வருகிறோம்,” என்று திரு கோ கூறினார்.
செம்ப்கார்ப் நிறுவனத்துடனான இந்த இணைப்பின் மூலம், “எதிர்கால எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அணுசக்தி எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக உள்ளோம்,” என்று அட்கின்ஸ்ரியலிஸ் நிறுவனத்தின் அணுசக்திப் பிரிவின் தலைவர் ஜோ செயிண்ட் ஜூலியன் தெரிவித்தார்.
மேம்பட்ட பொறியியல், கட்டுப்பாட்டு அமைப்புகள், இணையப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் திறன்களைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று எஸ்டி என்ஜினியரிங் நிறுவனத்தின் குழுமத் தலைமைத் தொழில்நுட்ப, மின்னிலக்க அதிகாரி லீ ஷியாங் லாங் கூறினார்.
