செங்காங் - பொங்கோல் இலகு ரயில் (எல்ஆர்டி) பாதைக்கான புதிய ரயில்களில் முதல் இரண்டு, நவம்பர் 23ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் (2025) மூன்றாம் காலாண்டில் அவை பயணிகளுக்கு சேவை வழங்கத் தொடங்கும்.
புதிய ரயில்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு ரயில் பெட்டிகள் அமைந்துள்ளன.
செங்காங்கிலும் பொங்கோலிலும் அதிகரித்துள்ள பயணிகளின் தேவையை ஈடுகட்டும் நோக்கில், இத்தகைய புதிய 25 ரயில்களை அதிகாரிகள் சேவையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்தப் பதிவில் புதிய ரயில்கள் கப்பலிலிருந்து கீழே இறக்கப்படுவதைக் காட்டும் காணொளியையும் அது இணைத்துள்ளது.
புதிய ரயில்கள் செங்காங் எல்ஆர்டி பணிமனைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு அவை முழுமையாகச் சோதிக்கப்பட்ட பிறகே பயணிகள் சேவையில் இணைக்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
எஞ்சியுள்ள 23 புதிய ரயில்களும் படிப்படியாகச் சிங்கப்பூர் வந்து சேரும். 2025ன் மூன்றாம் காலாண்டுக்குப் பிறகு அவை சேவையில் இணையத் தொடங்கும்.
புதிய ரயில்களை ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
செங்காங் - பொங்கோல் எல்ஆர்டி பாதையில் தற்போது இரண்டு பெட்டிகளைக் கொண்ட 16 ரயில்களும் ஒரு பெட்டி மட்டும் கொண்ட 25 ரயில்களும் சேவை வழங்குவதாக ஆணையம் நவம்பர் 25ஆம் தேதி தெரிவித்தது.