வடக்கு - கிழக்கு பெருவிரைவு ரயில் பாதையிலும் செங்காங் - பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) ஏற்பட்ட சேவைத் தடங்கலுக்கு மின்விசைப் பலகை (switch board) சேதமுற்றதே காரணம் என முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தெரிவித்துள்ளது.
மின்சாரத்தின் அளவு திடீரென அதிகரித்ததால் செங்காங்கிலுள்ள வடக்கு - கிழக்கு ரயில் பாதைப் பணிமனையின் துணைமின் நிலையத்தில் இருக்கும் இரு மின்விசைப் பலகை ஒன்று சேதமடைந்ததாகக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட ரயில் சேவைக் கட்டமைப்புகளுக்கு அதன் மூலமே மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.
அதே நேரத்தில், பாதுகாப்பு அம்சம் முடுக்கிவிடப்பட்டதால் இரண்டாவது மின்விசைப் பலகை சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டது என்றும் ஆணையம் தெரிவித்தது.
முன்னதாக, செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி சேவை புதன்கிழமை காலை வழக்கநிலைக்குத் திரும்பியதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது.
அச்சேவை செவ்வாய்க்கிழமையன்று ஏறத்தாழ 10 மணி நேரத்துக்குத் தடைபட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட அசௌகரியத்துக்குப் புதன்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் எஸ்பிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பதிவு வழியாக மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்குச் சிறிது நேரம் கழித்து, வடக்கு - கிழக்கு எம்ஆர்டி ரயில் பாதையில் ஃபேரர் பார்க் நிலையத்துக்கும் பொங்கோல் கோஸ்ட் நிலையத்துக்கும் இடையில் உள்ள 11 நிலையங்களிலும் செங்காங் - பொங்கோல் எல்ஆர்டி சேவை முழுவதும் மின்தடையால் முடங்கின.
செங்காங் எல்ஆர்டி சேவை பிற்பகல் 3.34 மணி அளவில் வழக்கநிலைக்குத் திரும்பியது. மாலை 4.04 மணி அளவில் பொங்கோல் எல்ஆர்டி சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது.
இரவு 9.20 மணிக்குச் சேவை முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பியது.
தொடர்புடைய செய்திகள்
அதுவரை, செங்காங் எல்ஆர்டி பாதையிலும் பொங்கோல் எல்ஆர்டி பாதையிலும் மாலை உச்சவேளையின்போது ஒற்றைத் தண்டவாளம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்தத் தகவலை எஸ்பிஎஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் செவ்வாய்க்கிழமையன்று பதிவிட்டது.