ஆஸ்திரேலியாவின் நலன்களுக்கு மூத்த அமைச்சர் லீ யோசனை

ஆஸ்திரேலியாவின் நலன்களுக்கு மூத்த அமைச்சர் லீ யோசனை

கோப்புப் படம்: தகவல், மின்னிலக்க மேம்பாடு அமைச்சு

09 Nov 2026 - 5:56 pm

2 mins read

ஆஸ்திரேலியா, அதன் நலன்களைப் பெருக்கிக் கொள்ளும் யோசனையை மூத்த அமைச்சர் லீ சியன் லூங் முன்வைத்துள்ளார்.

உலகம் முழுவதும் போட்டி அதிகரித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் பொருளியல், பாதுகாப்பு, மக்கள் தொடர்புகள் பிற ஆசிய நாடுகளுடன் வலுப்படுத்த வேண்டும் என்பதே அந்த யோசனையாகும்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) ‘2026 ஏபிசி போயர் விரிவுரை’ தொடரில் பேசிய திரு லீ, “ஆஸ்திரேலியா ஒரு தென்கிழக்காசிய நாடு அல்ல, ஆனால் அது ஆசியானின் மிக நெருங்கிய பங்காளியாக இருக்க வேண்டும்,” என்றார்.

குறிப்பாக சிறிய, நடுத்தர நாடுகள் முன்னெப்போதையும்விட இணைந்து செயல்பட வேண்டிய இந்தக் காலகட்டத்தில் இது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

வல்லரசுகளுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளதாலும் பலதரப்பு ஒத்துழைப்பு சிதைந்து வருவதாலும் அனைத்துலக சூழல் கணிசமாக மாறியுள்ளதை திரு லீ சுட்டிக்காட்டினார்.

உலக ஒழுங்கின் முந்தைய ஆதாரமாக அமெரிக்கா இருந்தது. ஆனால் தற்போது தனது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான உலகளாவிய பங்கை அது மறுமதிப்பீடு செய்து வருகிறது. அதே வேளையில் சீனாவின் வளர்ந்து வரும் உத்திபூர்வ, பொருளியல் ஆதிக்கத்தை பிற நாடுகள் உணர்ந்து வருகின்றன.

பல நாடுகள் கூடுதல் தற்சார்பு நிலையை அடைவதோடு தங்களது உத்திபூர்வ நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவுடனான உறவுகளை எவ்வாறு சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் அவை தற்போது திட்டமிட்டு வருகின்றன என்று திரு லீ கூறினார்.

இருப்பினும், தன்னிறைவு என்பது நண்பர்கள், பங்காளிகளால் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.

இதற்கு உதாரணமாக, வரலாற்று ரீதியாகச் சிக்கலானதாகக் கருதப்பட்ட தென்கொரியா, ஜப்பான் இடையிலான உறவுகளில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

“நியூசிலாந்தையும் தாண்டி ஆஸ்திரேலியாவின் வட்டாரப் பங்காளிகள் ஆசியாவிலும் குறிப்பாக தென்கிழக்காசியாவிலும் உள்ளனர். ஆசியா முழுவதும் உங்கள் உறவுகள் எவ்வளவு ஆழமாக உள்ளதோ, அவ்வளவு அதிகமாக உங்கள் சொந்த நலன்களைப் பெறுவதற்கான இடம் உங்களுக்குக் கிடைக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இருதரப்புக்கும் பயனளிக்கும் திட்டங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மின்னிலக்கம், பசுமைப் பொருளியல், பொதுச் சுகாதாரம், பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை வாய்ப்புகளில் அடங்கும்.

இத்தகைய ஒத்துழைப்புகளால் அமெரிக்கா-சீனா இடையிலான போட்டியை மட்டுமே பார்ப்பதற்குப் பதிலாக நாடுகள் ஒன்றையொன்று மேம்பாட்டிற்கான பங்காளிகளாக கருத முடியும் என்று மூத்த அமைச்சர் லீ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்