சுகாதாரப் பராமரிப்புக்கு முதியோர் தொடர்புகொள்ள ஒரே இடம்

2 mins read
08720eb6-f8af-4dd7-b91d-24002ff45d06
சமூகப் பராமரிப்பு செயல்திட்ட பயிலரங்கில் பேசிய அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூகப் பராமரிப்புக்கு முதியோர் ஒரே இடத்தை தொடர்புகொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படவிருக்கிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதிவேகமாக மூப்படையும் மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் இத்தகைய சேவைகளை ஒருங்கிணைக்க அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருவதாக மே 28ஆம் தேதி சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

தனித்தனியாக சமூக சேவைகளை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக அவற்றை ஒருங்கிணைப்பதால் குடும்பங்கள் எளிதில் சேவைகளைப் பெற முடியும், ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாற முடியும் என்றார் அவர்.

ஏஐசி எனும் ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு முகவையின் சமூகப் பராமரிப்பு செயல்திட்ட பயிலரங்கு 2025ல் அவர் பேசினார்.

அண்மையில் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட திரு ஓங், சமூகப் பராமரிப்பில் தொலைநோக்குத் திட்டங்களைப் பட்டியலிட்டார்.

“அந்தக் கட்டமைப்பு, எந்தவித சுகாதார நிலையில் இருந்தாலும் அனைத்து முதியோர்களையும் உள்ளடக்கியிருக்கும். நோய்வாய்ப்படுவதிலிருந்து தடுக்க சமூகப் பராமரிப்பு உதவி செய்யும். ஒருவேளை நாம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அது, நோய்களை நிர்வகிக்கவும் அது மோசமடைவதைத் தடுக்கவும் ஆதரவளிக்கும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் சமூகப் பராமரிப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுவாக்கில் சிங்கப்பூரில் 65 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட ஒரு மில்லியன் மூத்தோர் இருப்பார்கள். அவர்களில் பாதி பேர் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சாத்தியமுள்ளது.

அவர்களது அன்றாட நடவடிக்கைகளில் ஏதாவது ஒரு உதவி தேவைப்படுவோர் எண்ணிக்கை பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கை 2020ல் 58,000லிருந்து 2030ல் 100,000ஆக அதிகரிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்