செந்தோசாவில் பயணிகள் எளிதாகவும் வசதியாகவும் பயணம் செய்வதற்காகத் தேவைக்கேற்ற தானியக்கப் பகிர்வு வாகனச் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
செந்தோசா மேம்பாட்டுக் கழகமும் தடா மொபிலிட்டி நிறுவனமும் இணைந்து இந்த முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளன.
2027 தொடக்கத்தில் இச்சேவையின் சோதனையோட்டம் தொடங்கும். அக்காலகட்டத்தில், பிற்பகல் 1 மணி முதல் மாலை 7 மணி வரை பயணிகள் இச்சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
செந்தோசாவிற்கு வரும் ஒவ்வொரு பயணியின் நேரமும் தடையற்ற வகையிலும் மகிழ்வானதாகவும் அமைய வேண்டும் என்பதே தமது விருப்பம் என செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தியென் குவீ எங் தெரிவித்தார்.
தடா நிறுவனத்துடனான இந்த இணைப்பு ‘ஸ்மார்ட் செந்தோசா’ தொலைநோக்குத் திட்டத்தின் ஓர் அங்கம் என அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சேவை தொடக்கத்தில் ‘வீரைடு’ (WeRide) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு தானியக்க வாகனங்களுடன் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு தானியக்க வாகனத்திலும் எட்டு பயணிகள் வரை அமர்ந்து செல்லலாம்.
தீவின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக மொத்தம் 27 இடங்கள் படிப்படியாக அமைக்கப்படவுள்ளன.
சிலோசோ பீச் நடைபாதை, பலவான் பீச் நடைபாதை ஆகியவற்றையும் தீவின் பொதுச் சாலைகளையும் இந்த வாகனங்கள் விரிவாகப் பயன்படுத்தும். இதன்மூலம் பயணிகள் கடற்கரைச் சிறுபேருந்துகளுக்கு மாற வேண்டிய அவசியமின்றி, கடற்கரையின் உல்லாசத் தலங்களுக்கும் உணவகங்களுக்கும் நேரடியாகச் சென்றுவர முடியும்.
செந்தோசாவின் பரந்த கட்டமைப்பில் தேவைக்கேற்ற தானியக்கப் பகிர்வுப் போக்குவரத்துச் சேவை அறிமுகமாவது இதுவே முதன்முறை.
பயணிகள் தடா செயலி வாயிலாகத் தங்களுக்குத் தேவையான பயணங்களை முன்பதிவு செய்யலாம்.
“எதிர்காலப் போக்குவரத்து என்பது மக்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு பயண வழிகளை வழங்குவதாகும். பாதுகாப்பிற்கு முதலிடம் அளித்து தானியக்கத் தொழில்நுட்பத்தைத் தடா நிறுவனத்தின் தளத்துடன் இணைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று தடா மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷான் கிம் தெரிவித்தார்.
ஜிபிஎஸ் தரவுகளின் அடிப்படையில் அருகிலுள்ள பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களைச் செயலி பரிந்துரைக்கும். பயணிகள் வாகனத்தில் ஏறியதும் உள்ளே இருக்கும் கியூஆர் குறியீட்டை வருடி பயணத்தைத் தொடங்கலாம்.
அத்துடன், நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகளில் உள்ள கியூஆர் குறியீட்டை வருடி இச்சேவை தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய சோதனையோட்டக் காலத்தின்போது ஒவ்வொரு வாகனத்திலும் பயிற்சி பெற்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இருப்பார். அத்துடன், தொலைதூரக் கண்காணிப்பு வசதிகளும் அதில் இடம்பெற்றிருக்கும்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வாகனங்கள் இயக்கப்படும்.
‘வீரைடு’ நிறுவனத்தின் தானியக்க வாகனங்கள் ஏற்கெனவே உலகின் 13 நாடுகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட நகரங்களில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தில் வாகனங்களை இயக்குவதிலும் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும் டவர் டிரான்சிட் சிங்கப்பூர் பங்கேற்கிறது.
செந்தோசாவில் கடந்த ஓராண்டாகப் பேருந்துகளை இயக்கிய அனுபவம் இருப்பதால், தீவின் சாலைக் கட்டமைப்பு குறித்துத் தங்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்கு தெரியும் என்று அது தெரிவித்துள்ளது.
தேவைப்படும் நேரத்தில் வாகனத்தை உடனடியாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில், அவசரகால நடவடிக்கை, தற்காப்பு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட அம்சங்களில் தங்கள் அதிகாரிகளுக்கு ஒரு மாத கால சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் விளக்கியது.
முதற்கட்டமாக 2027ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் செந்தோசாவின் மேற்குப் பகுதியில் இச்சேவை தொடங்கும். பீச் நிலையம், சிலோசோ பாயின்ட் உள்ளிட்ட 21 இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்கள் அமைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியோடு தீவின் பிற பகுதிகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும்.
