உலகப் பொருளியல்மீது இந்தியா, சீனாவின் தாக்கம் குறித்த கருத்தரங்கு தொடக்கம்

2 mins read
1e5cbd3b-45a0-415f-a1d0-58e5426a98bc
தொடக்க விழாவில் பங்கேற்ற நிபுணர்கள். - படம்: சாவ் பாவ்

உலகின் 35 விழுக்காட்டு மக்கள்தொகையைக் கொண்டுள்ளதுடன் உலகப் பொருளியலுக்கு 50 விழுக்காட்டுப் பங்களிக்கும் இரு நாடுகளான இந்தியா, சீனா இடையிலான உறவு, அவை உலகப் பொருளியலில் ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்டவற்றைக் குறித்து கலந்தாலோசிக்கும் கருத்தரங்கு தொடங்கியுள்ளது.

தெற்காசிய ஆய்வுக் கழகமும் கிழக்காசிய ஆய்வுக் கழகமும் இணைந்து சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடத்தவுள்ள கருத்தரங்கு, பயிலரங்குகளின் தொடக்க விழா நவம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது.

இதில் வெளியுறவு அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர், உலகின் இரண்டாவது ஆகப்பெரிய பொருளியலான சீனா, ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சிங்கப்பூருக்கு இருக்கும் நல்லுறவைக் குறிப்பிட்டுப் பேசினார்.

இரு நாடுகளிலும் சிங்கப்பூர் முக்கிய முதலீட்டாளராக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்திய சீன நல்லுறவு உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் அவசியமானது என்று சொன்னார்.

தொடர்ந்து இந்தக் கருத்தரங்குகள், ஆலோசனைகள் மூலம் அந்நாடுகளில் எதிர்காலப் பொருளியல் பாதைகள், உலக அரங்கில் அவை ஏற்படுத்தும் மாற்றங்கள், அவற்றின் விளைவுகள் குறித்த பல்வேறு புதிய கண்ணோட்டங்கள் வெளிப்படும் எனத் தாம் நம்புவதாகவும் சொன்னார்.

இந்நிகழ்ச்சியில் பொதுத்துறை, பெருநிறுவனத் துறைகள், கல்வி, ஆராய்ச்சி, வெளியுறவு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 200 பேர் பங்கேற்றனர். இதில் சீனாவின் அனைத்துலக உறவுகள் நிலையத்தின் துணை இயக்குநர் லி லி, அந்நாட்டின் உலகளாவிய ஒழுங்கு குறித்த கண்ணோட்டங்கள், பன்னாடுகளுடனான உறவு உள்ளிட்டவை பற்றிப் பேசினார்.

பொருளியல், பாதுகாப்பு ஒத்துழைப்பின் அவசியம், வட்டார நிலைத்தன்மையின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து தெற்காசிய ஆய்வுக் கழக ஆய்வுப் பேராசிரியர் சி ராஜாமோகன் பேசினார்.

தொடர்ந்து உலகப் பொருளியலில் இவ்விரு நாடுகளின் முக்கியத்துவம், சீனப் பொருளியல் கண்ணோட்டம், இந்தியாவின் பொருளியல் சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து நிபுணர்கள் பேசினர். இவற்றைப் பேராசிரியர் பி ஸ்ரீநிவாஸ் தொகுத்துரைத்தார்.

மேலும், பொருளியல், முதலீட்டு உத்தி நிபுணர்கள், பொருளியல் வல்லுநர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்